மூணாறு நிலச்சரிவு மீட்பு பணிகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க தமிழக அரசு தயார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி.!!!

மதுரை: மூணாறு நிலச்சரிவு மீட்பு பணிகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். பருவமழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மதுரை மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தினை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் உதயகுமார், பருவமழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் பல்வேறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நீலகிரி மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் உடனடியாக நிவாரண முகாமிற்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மூணாறு நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. நீலகிரி, கொடைக்கானல் ஆகிய மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது என குறிப்பிட்டார்.

இதை தொடர்ந்து, மூணாறு நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழர்களை விரைவில் மீட்கும்படி கேரள முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும், கேரள அரசுகளுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு வழங்க தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மூணாறு நிலச்சரிவு மீட்பு பணிகளுக்கு தேவையான ஒத்துழைப்பையும் உதவியும் வழங்க வருவாய்த்துறையும் பொதுத்துறையும் தயார் நிலையில் உள்ளது. நிலச்சரிவு மீட்பு பணியினை தமிழகம் கண்காணித்து வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Stories: