ரேஷன் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது!: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் எச்சரிக்கை..!!

சென்னை: ரேஷன் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக நியாயவிலை கடை  பணியாளர் சங்கம் நோட்டீஸ் அளித்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காலத்தில் பணியாற்றும் நியாயவிலை கடை ஊழியர்களுக்கு தமிழக அரசால் அளிக்கப்படும் கொரோனா மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றால் மரணமடைந்த நியாயவிலை கடை ஊழியர்களுக்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை தமிழகம் முழுவதும் தமிழ்நாடு நியாயவிலை கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து நியாயவிலை கடைகளில் விநியோகம் பாதிக்காத வண்ணம் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

 வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பதிலாக உரிய மாற்று ஏற்பாடுகளை மேற்கொண்டு நியாயவிலை கடைகள் திறப்பது உறுதி செய்துகொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளும் நியாயவிலை கடை பணியாளர்களுக்கு No work No pay என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்தம் செய்ய வேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பிரமணியன் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Related Stories: