அதிமுகவினர் தலையீட்டால் எழும் பள்ளம் ஏரியில் தூர்வாரும் பணி நிறுத்தம்: நீர் நிரம்பியும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி இல்லை

கொடைக்கானல்: கொடைக்கானல் மேல்மலை மன்னவனூர் கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரைச் சுற்றி விவசாய நிலங்கள் அதிகமாக உள்ளன. இங்குள்ள எழும் பள்ளம் ஏரி மூலம் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஏரியை தூர்வாருவதற்கு, குடிமராமத்து திட்டத்தின் கீழ் தமிழக அரசு ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கியது. இப்பணிக்காக கிராம மக்கள் ஒத்துழைப்புடன் கடந்த மே 23ல் பூமி பூஜை போடப்பட்டது. இதையடுத்து ஏரியை தூர்வாரும் பணியை மேற்கொள்ள, மன்னவனூர் கிராமம் எழும் பள்ளம் கண்மாய் பாசன விவசாயிகள் சங்கம் பொறுப்பேற்று மேற்கொள்ள, பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுத்தது.

இதனிடையே, அதிமுக கிளை கழக நிர்வாகிகள், ஏரி தூர்வாரும் பணியை எங்களை தவிர யாரும் செய்யக் கூடாது என தடை போட்டு வந்தனர். இதனால், கடந்த 3 மாதமாக ஏரி தூர்வாரப்படாமல் உள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக பெய்த மழையில் ஏரியில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. இருப்பினும் விவசாயிகள் மழ்ச்சி அடையவில்லை. இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘எழும் பள்ளம் ஏரியை தூர்வாரியிருந்தால் அதிக தண்ணீரை தேக்கியிருக்கலாம். விவசாயத்திற்கும், கோடை காலத்தில் குடிநீருக்கும் பயன்பட்டு இருக்கும். அதிமுகவினரின் தலையீட்டால் தூர்வாரும் பணி தடைப்பட்டுள்ளது. எனவே, அதிமுகவினர் தலையீடு இல்லாமல் தூர்வாரும் பணியை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: