×

தொடர்மழையால் நீர்வரத்து வினாடிக்கு 11,533 கனஅடி மீண்டும் 142ஐ எட்டுமா பெரியாறு?

கூடலூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நேற்று மாலை நீர்மட்டம் 135 அடியை நெருங்கியது. விரைவில் 142 அடிக்கு உயர வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு வினாடிக்கு 11,533 கனஅடி அளவுக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் விறுவிறுவென உயர்ந்து வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 134.5 அடி. நீர்வரத்து வினாடிக்கு 11,533 கனஅடி. அணையிலிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 1,671 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

அணையின் இருப்புநீர் 5,586 மில்லியன் கனஅடி. நீர்வரத்து அதிகம் இருப்பதால், அணையின் நீர்மட்டம் இம்முறை 142 அடியை எட்டும் வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். வைகை அணை நீர்மட்டம் 35.04 அடி. நீர்வரத்து வினாடிக்கு 1571 கனஅடி. அணையிலிருந்து மதுரை குடிநீருக்காக வினாடிக்கு 72 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இருப்புநீர் 608 மில்லியன் கனஅடி. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 77.24 அடி. நீர்வரத்து வினாடிக்கு 8 கனஅடி. நீர்வெளியேற்றம் 3 கனஅடி. இருப்பு நீர் 36.44 மில்லியன் கனஅடி. மஞ்சளாறு அணை நீர்மட்டம் 35.60 அடி. நீர்வரத்து இல்லை. நீர்வெளியேற்றம் வினாடிக்கு 6 கனஅடி. இருப்பு நீர் 132.45 மில்லியன் கனஅடி.
பெரியாறு 83.2 மி.மீ., தேக்கடி 40.4 மி.மீ., கூடலூர் 12 மி.மீ., பாளையம் 3.6 மி.மீ., வீரபாண்டி 0.4 மி.மீ மழை அளவு பதிவாகி இருந்தது.

இதற்கு முன்...
பெரியாறு அணையில் 142 அடிக்கு தண்ணீர் தேக்க கடந்த 2014 மே 7ல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பின் 2014 நவ. 21, 2015 டிச. 7, 2018 ஆக. 15 என மூன்று முறை 142 அடிக்கு தண்ணீர் தேக்கப்பட்டது. கடந்தாண்டு செப். 8ல் அதிகபட்சமாக 131.15 அடி வரை நீர்மட்டம் உயர்ந்தது. நேற்று மாலை அணையின் நீர்மட்டம் 134.5 அடியாக இருந்தது. தற்போது நீர்வரத்து வினாடிக்கு 11,533 கனஅடியாக இருப்பதால் விரைவில் 142 அடியை எட்ட வாய்ப்பு உள்ளது என பொதுப்பணித்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கடந்தாண்டு இதே நாளில்...
கடந்த ஆண்டு இதே நாளில் பெரியாறு அணை நீர்மட்டம் 116 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 4,318 கனஅடியாகவும், தமிழகப்பகுதிக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 296 கனஅடியாகவும் இருந்தது. 2018 இதே நாளில் அணை நீர்மட்டம் 132.8 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 1,240 கனஅடியாகவும், தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,511 கனஅடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : water level rise , water level, rise again, 142 by 11,533 cubic feet per second ,continuous rain?
× RELATED உத்தரகாண்ட் ஆற்றில் நீர் மட்டம் உயர்வு: மீட்பு பணிகள் தற்காலிக நிறுத்தம்