விஜயவாடாவில் கொரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் தீ விபத்து!: பரிதாபமாக 7 பேர் பலி!!!

விஜயவாடா: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தனியார் நட்சத்திர ஹோட்டலில், கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விஜயவாடாவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் 40 நோயாளிகளுக்கு, சிகிச்சை அளிக்க தனியார் ஹோட்டலில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்குள்ள நோயாளிகள் அலறியடுத்து ஓடினர். பின்னர் மளமளவென பரவிய தீ மற்ற கட்டடங்களுக்கு பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

தீவிபத்து அதிகாலை நேரத்தில் ஏற்பட்டதால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நோயாளிகள் எழுந்து பார்த்தபோது அந்த இடமே புகை மண்டலமாக காட்சியளித்தது. அப்போது தீயிலிருந்து தப்பிக்க நோயாளிகள் ஜன்னல் வழியாக தாண்டி குதித்தும், தீயில் சிக்கியும் சம்பவ இடத்திலேயே 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் தீயில் சிக்கி தவித்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகளை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆந்திராவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிதீவிரமாக பரவி வருகிறது. அதாவது ஆந்திராவில் நேற்றைய நிலவரப்படி சுமார் 2 லட்சத்து 17 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், தனிமைப்படுத்தப்பட்ட முகாம்கள் தவிர கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறப்படும் தனியார் மருத்துவமனைகளும் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்க அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

 இதனையடுத்து கொரோனா நோயாளிகள் தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து சமூக இடைவெளியுடன் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக நட்சத்திர ஹோட்டல்களிலும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களை, தனியார் மருத்துவமனைகள் உருவாக்கியுள்ளனர். இந்த நிலையில் தற்போது ஹோட்டலில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Related Stories: