கோழிக்கோடு விமான விபத்து பற்றி புதிய தகவல்!: ஓடுதளத்தில் விமானம் இறக்குவதில் குழப்பம் காரணம்..கருப்புப்பெட்டியின் உதவியோடு விசாரணை தீவிரம்..!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிகழ்ந்த கோர விபத்துக்கு ஓடுதளத்தில் விமானத்தை தரையிறக்குவதில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டிருக்கிறது. துபாயில் இருந்து கோழிக்கோட்டை அடுத்த கரிப்பூர் விமான நிலையத்துக்கு 190 பயணிகளுடன் வந்த விமானம் ஓடுதளம் 28ல் தரையிறக்க முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் அப்போது பெய்த கனமழையால் ஓடுதளம் 28ஐ விமானியால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் இதையடுத்து உடனடியாக ஓடுதளம் 10ல் தரையிறக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 தொடர்ந்து, ஓடுதளம் 10ல் விமானம் தரையிறக்க திருப்பப்பட்ட போது கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக ஓடுதளத்தில் ஓடி சுவரை உடைத்துக்கொண்டு 35 அடி பள்ளத்தில் விழுந்து கோர விபத்து நேரிட்டிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே விமானத்தை தரையிறக்கும் போதும், விபத்து நிகழ்வதற்கு முன்னரும் விமானிகளின் உரையாடல் பதிவான டிஜிட்டர் வாய்ஸ் ரெக்கார்டர் அடங்கிய கருப்புப்பெட்டி வகைப்பற்றப்பட்டு ஆய்வு தொடங்கியுள்ளது. இதனிடையே விமான விபத்தில் உயிரிழந்த துணை விமானியாக அகிலேஷ் குமாரின் உடல் டெல்லி கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவர் உடலுக்கு பலர் மலரஞ்சலி செலுத்தினர்.

கோழிக்கோடு மாவட்டம் கரிப்பூரில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு 7:45 மணிக்கு வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா சிறப்பு விமானம் தரையிறங்கியது. அப்போது ஓடுதளத்தில் இருந்து விலகி ஓடி 3 துண்டுகளாக உடைந்தது. இதில் 2 பைலட்டுகள் உட்பட 18 பேர் உயிரிழந்துவிட்டனர். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணமாக ஏர் இந்தியா நிறுவனம் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளது. படுகாயம் அடைந்தோருக்கு 2 லட்சம் ரூபாயும், சாதாரண காயமடைந்தோருக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: