இடுக்கியில் மழை தொடர்வதால் மீட்புப்பணியில் தொடர் தொய்வு!: மூணாறு மண்சரிவில் அனைவரும் இறந்திருக்கலாம் என தகவல்..!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்த அனைவரும் இருந்திருப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. ராஜமலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 நாட்களாக தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 27 பேரின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் மண்ணில் புதைந்தவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை என்று இடுக்கி மாவட்ட ஆட்சியர் தினேசன் கூறியுள்ளார். இதனிடையே நேற்று மட்டும் 12 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ராஜமலை தோட்ட தொழிலாளர்கள் அனைவரும் தமிழர்கள் ஆவர். தற்போது மண்ணுக்கு அடியில் 42 பேர் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. என்றாலும் அவர்களில் யாரும் இனி பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த 2018 - 2019ம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் ராஜமலை பாதிக்கப்படவில்லை. இதனாலேயே தற்போதைய மழைக்கு இங்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனிடையே தற்போது இடுக்கியில் 22 சென்டி மீட்டர் மழை வரை மழை பெய்துள்ளது. மேலும் அங்கு கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து உடல்களையும் மீட்க இயலுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இடுக்கியில் மழை தொடர்வதால் மீட்புப்பணியில் தொடர் தொய்வு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: