ஆபத்தான டேபிள் டாப் விமான நிலையங்கள்

பொதுவாக விமான ஓடுபாதைகள் சமதளப் பகுதியில் அமைந்திருக்கும். விமானங்கள் மேலே பறக்க எழும்பும் போதும், இறங்கும் போதும் நீண்ட தூரம் ஓட வேண்டும் என்பதால், 3,150 மீட்டர் நீள ஓடுபாதை அமைக்கப்பட்டிருக்கும். இந்த பாதை முடிந்த பிறகும் சிறிது தூரத்திற்கு புல்வெளியுடன் காலி இடங்கள் விடப்பட்டிருக்கும். இதில், சமதளப் பகுதி இல்லாமல், மலை உச்சியில் உள்ள சமவெளியில் அமைக்கப்படும் விமான நிலையங்கள் ‘டேபிள் டாப்’ விமான நிலையங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த விமான நிலையத்தின் நாலாபுறமும் பெரிய பள்ளத்தாக்குகள் மட்டுமே இருக்கும். இதில் அமைக்கப்படும் ஓடுபாதைகள், மற்ற விமான நிலைய ஓடுபாதைகளின் தூரத்தை விட குறைவாகவே இருக்கும். எனவே, இதில் விமானம் இறங்குவதும், புறப்பட்டு செல்வதும் எப்போதுமே சவாலான விஷயமாகவே இருக்கும். குறிப்பாக, மழை போன்ற இயற்கை சீற்றங்களின் போது, இந்த சவாலான பணி மேலும் அபாயகரமான சவாலாகவிடும். அதாவது, ‘கர்ணம் தப்பினால் மரணம்’ என்ற வகையில்தான், இந்த ஓடுபாதைகள் இருக்கும்.

நேற்று முன்தினம் விபத்து நடந்த கோழிக்கோடு விமான நிலையமும் ‘டேபிள் டாப்’ விமான நிலையம்தான். இதன் ஓடுபாதையின் நீளம் 2,850 மீட்டர் மட்டுமே. எனவே, அனுபவமிக்க விமானிகள் மட்டுமே டேபிள் டாப் விமான நிலையங்களில் விமானங்களை இயக்க  அனுமதிக்கப்படுகின்றனர். இங்கு, விமானி துளியளவு தவறு செய்தாலும் விபத்து நிச்சயம். ஓடுபாதையில் இருந்து கீழே உள்ள பள்ளத்தாக்கில் விமானம் விழுந்து நொறுங்குவதும் உறுதி. குறுகிய ஓடுபாதையை தாண்டினாலும் விபத்து, ஓடுபாதையை விட்டு விலகி வலது, இடது எந்த புறத்தில் தவறி திரும்பினாலும் விபத்து தவிர்க்க முடியாததாகி விடும். அதுபோன்று, கனமழையால் மோசமான வானிலை காரணமாகவே தற்போது கோழிக்கோடு விமான விபத்து நிகழ்ந்துள்ளது. விமானி அனுபவசாலியாக இருந்தும் அவரால் பத்திரமாக விமானத்தை தரை இறக்க முடியவில்லை.

விரிசல்,தண்ணீர் தேங்கும் மோசமான ஓடுபாதை

கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூலை 2ம் தேதி சவுதி அரேபியாவின் டம்மாமில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரை இறங்கும் போது, அதன் வால் பகுதி ஓடுபாதையில் மோதியது தொடர்பாக விமான போக்குவரத்து இயக்குனரகம் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில் கோழிக்கோடு விமான ஓடுபாதையில் பல்வேறு முக்கிய பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. ஓடுபாதையில் விரிசல்கள், தண்ணீர் தேங்குவது, அதிகப்படியான ரப்பர் ஒட்டிக் கொண்டிருத்தல் மற்றும் பிற குறைபாடுகள் இருப்பதை சுட்டிக்காட்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீசுக்குப் பிறகு குறைபாடுகள் சரி செய்யப்பட்டதா என்பது குறித்த தகவல்கள் இல்லை.

மிக ரம்மியமான ஓடுபாதை

கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தின் டேபிள் டாப் ஓடுபாதை இந்தியாவின் மிக  ரம்மியமான விமான ஓடுபாதைகளில் ஒன்று என, ஏர் இந்தியா கடந்த 4 ஆண்டுகளுக்கு  முன்பு புகழ்ந்துள்ளது. கடந்த 2016ல் ஏர் இந்தியா நிறுவனத்தின் இணையதள  பிளாக்கில் வெளியிடப்பட்ட பதிவில், இந்தியாவின் அழகு எழில் கொஞ்சும்  ரம்மியமான ஓடுபாதைகள் பட்டியலில் கோழிக்கோடு ஓடுபாதை இடம் பெற்றுள்ளது.  இந்த ஓடுபாதையில் விமானத்திலிருந்து இயற்கை அன்னையின் அழகை கண்குளிர  ரசிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. சுற்றி மலைகளும், பச்சைபசேல் மரங்களும் என  ஓடுபாதையில் இருந்து விமானம் எழும்பும் போது இயற்கையின் ஈடுஇணையில்லா அழகை  பயணிகள் ரசிக்கலாம் என வர்ணிக்கப்பட்டு உள்ளது.

2010 கோர விபத்து நினைவிருக்கிறதா?

இந்தியாவில் கோழிக்கோடு தவிர மிசோரம் லெங்க்புய், கர்நாடகாவில் மங்களூரு, இமாச்சலில் சிம்லா, சிக்கிமின் பாக்யோங்க் விமான நிலையங்களும் டேபிள் டாப் விமான நிலையங்களாகும். இவை ரம்மியமான, அழகான மலைகளின் மீது அமைந்துள்ளன. ‘அழகிருக்கும் இடத்தில் ஆபத்தும் இருக்கும்,’ என்பது போல், இவைகள் அனைத்தும் ஆபத்தானவைதான். கடந்த 2010ல் மங்களூரு விமான நிலையத்தில் இதேபோல், ஓடுபாதையில் குறிப்பிட்ட தூரத்தை தாண்டி விமானம் இறங்கியதால், பள்ளத்தாக்கில் விழுந்து, வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இதில் பயணம் செய்த 158 பயணிகள் பலியாயினர். 8 பேர் மட்டுமே உயிர் தப்பினர். கோழிக்கோடு விபத்து விமானமும் 35 அடி பள்ளத்தில் விழுந்து இரண்டாக மட்டுமே பிளந்தது. ஆனால், மங்களூருவில் பள்ளத்தில் விழுந்த வேகத்தில் விமானம் வெடித்து தீப்பிடித்தது. அதனால், மோசமான உயிர் பலி ஏற்பட்டது.

அபாயகரமான பாட்னா ரன்வே

கோழிக்கோடு விமான விபத்தை தொடர்ந்து, இதே போல அபாயகரமான பீகார் மாநிலம் பாட்னா விமான நிலைய ஓடுபாதை மீது கவனம் செலுத்த வேண்டுமென்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. கடந்த 2000ல் பாட்னா ஜெய்பிரகாஷ் நாராயண் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த விபத்தில் 60 பயணிகள் பலியாயினர். இந்த விமான நிலையத்தின் ஓடுபாதை கோழிக்கோட்டை (9000 அடி) விட சிறியதாக வெறும் 6500 அடி நீளம் கொண்டதாகும். ஆனால் டேபிள் டாப் ரன்வே அல்ல. ஓடுபாதை அகலப்படுத்தப்பட்டாலும், குறுகிய நீளம் கொண்ட இங்கு விமானத்தை தரை இறக்குவதும், மேலே எழுப்புவதும் விமானிகளுக்கு மிக சவாலானதாக இருக்கிறது. எனவே ஓடுபாதையை நீட்டிக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன.

மோடி கேட்டறிந்தார்

விபத்து குறித்து அறிந்தவுடன் பிரதமர் மோடி, கேரள முதல்வரை தொடர்பு கொண்டு  விபரங்கள் குறித்து கேட்டறிந்தார். காயம்  அடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் செய்யப்படும் என  அவர் உறுதியளித்தார்.

துபாயில் உதவி எண்கள்

கோழிக்கோடு விமான விபத்து தொடர்பான தகவல்களை தர துபாயின் ஷார்ஜாவில் உள்ள இந்திய தூதரகம் உதவி எண்களை அறிவித்துள்ளது. இதே போல், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனமும் தனது ஷார்ஜா அலுவலகத்தில் உதவி எண்களை அறிவித்துள்ளது.

3 மீட்பு விமானம்

விபத்துக்குள்ளான விமானத்தின் பயணிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக ஏர் இந்தியா நிறுவனம் 3 சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது. இதில் 2 விமானங்கள் டெல்லியில் இருந்தும், ஒரு விமானம் மும்பையில் இருந்தும் இயக்கப்படுகிறது.

விசா காலம் முடிந்தவர்கள்

துபாய் சட்டப்படி விசா காலாவதி முடிந்தால் அங்கு   தங்குவது குற்றமாகும். ஆனால், கொரோனா காலம் என்பதால்   விசா காலாவதியானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல்   நாட்டிற்கே திரும்பி செல்ல அனுமதி அளித்துள்ளது.  இதனால், இந்த விமானத்தில் அனைத்து இருக்கைகளும்   நிரம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கேரளாவின் மிகப்பெரிய விபத்து

கடந்த 1998  ஜூலை 30ம் தேதி லட்சத்தீவில் இருந்து கொச்சிக்கு வந்த இந்தியன்  ஏர்லைன்சின்  பயணிகள் விமானம் தரையிறக்கும்போது விபத்தில்  சிக்கியது. இதில், 8 பேர் பலியாயினர். இதுதான் கேரளாவில் இதற்கு முன் நடந்த பெரிய விபத்தாகும். அதன்பிறகு இந்த கோர விபத்து நடந்துள்ளது. கோழிக்கோடு  விமான நிலையத்தில் இதற்கு முன்பு 7 முறை தரையிறக்கும்போது லேசான விபத்துக்கள்  நடந்துள்ளது. இருப்பினும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தரையிறங்குவதில் குழப்பம்

ரேடார் கருவியில் பதிவான காட்சியில் இருந்து முதல் முயற்சியில் விமானியால் விமானத்தை தரையிறக்க முடியவில்லை என்று தெரிய வந்துள்ளது. முதலில் தரையிறங்கும்ேபாது விமானம் 1975 அடிவரை தாழ்வாக பறந்துவிட்டு மீண்டும் உயர்ந்துள்ளது. கனமழையால் ஓடுபாதை விமானிக்கு தெரியாததால் அவர் மீண்டும் விமானத்தை உயர்த்தி இருக்கலாம். பின்னர், 7150 அடிவரை விமானம் உயர்ந்தது. சிறிது ேநரம் கழித்து 2வதாக பைலட் தரை இறக்க முயன்றார். 10வது ஓடுதளத்தில் விமானம் இறங்கியது. தரை இறங்குவதற்குமுன் குழப்பம் நிலவியதாக பயணிகளும் கூறியுள்ளனர். முதல் முயற்சி ஏன் தோல்வி அடைந்தது என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஆயிரம் மீட்டர் தள்ளி தரையிறங்கியது ஏன்?

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஓடுபாதை மாறி இறங்கியது குறித்து அந்நிறுவன செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘வழக்கமாக ஓடுபாதை 28ல் விமானம் தரை இறங்கும். மோசமான வானிலை நிலவியதால், முதல் முயற்சியின் போது விமானிக்கு ஓடுபாதை சரியாக தெரியவில்லை என்று கூறினார். எனவே, ஓடுபாதை 10ல் தரை இறங்கும்படி விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த ஓடுபாதை 2,700 மீட்டர் நீளம் கொண்டது. இதில் டாக்சிவே ’சி’ பகுதிக்கு அருகே, அதாவது ஓடுபாதையின் தொடக்கத்தில் இருந்து ஆயிரம் மீட்டர் தள்ளி விமானம் தரையை தொட்டது. அங்கிருந்து வெறும் 1700 மீட்டரில் விமானத்தை நிறுத்தி இருக்க வேண்டும். ஆனால், மழையால் விமானம் சறுக்கி, கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி உள்ளது,’’ என்றார். விமானி எதற்காக 1000 மீட்டர் தள்ளி விமானத்தை தரை இறக்கினார்? என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. தவறான கணிப்பின் காரணமாக இந்த தடுமாற்றம் ஏற்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.

1990 விமான விபத்தில் உயிர் தப்பிய பைலட்

கோழிக்கோடு விமான விபத்தில் பலியான பைலட் தீபக் சாதே (58), கடந்த 1990ல் நடந்த விமான விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி வந்தவர். அப்போது அவருக்கு மண்டை ஓட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. இனியும் அவர் எழுந்து விமானம் ஓட்டுவார் என அவரது குடும்பத்தினரே எதிர்பார்க்கவில்லை. ஆனால், பைலட்டாக இருப்பதில் பேரார்வம் கொண்ட சாதே தனது தன்னம்பிக்கை மூலம், காயத்திலிருந்து குணமடைந்து, தீவிர பயிற்சியின் மூலம் மீண்டும் விமானம் ஓட்டுவதற்கான பரிசோதனையில் வெற்றி கண்டார். இந்திய விமானப்படையில் விங் கமாண்டராக 21 ஆண்டுகள் சேவை புரிந்த சாதே, விமானம் ஓட்டுவதில் 36 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். 2005ம் ஆண்டு முதல் பயணிகள் விமானத்தை ஓட்டத் தொடங்கினார்.

அவரது உறவினர் ஒருவர் கூறுகையில், ‘‘சாதே அனைவரிடமும் நன்கு பழகக் கூடியவர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இந்தியர்களை தாய்நாட்டிற்கு மீட்டு வருவதை பெருமையாக கருதினார். 1990 விபத்தில் உயிர் தப்பி மீண்டும் அவர் விமானம் ஓட்டத் தகுதி பெற்றது நிச்சயம் மிகப்பெரிய அதிசயமே’’ என்றார். சாதே தனது மனைவியுடன் மும்பையில் வசிக்கிறார். அவரது பெற்றோர் நாக்பூரில் வசிக்கின்றனர். நேற்று சாதேவின் தாய் நீலா சாதேக்கு 84வது பிறந்தநாள். இதனால், கேரளாவில் இருந்து நாக்பூர் சென்று சர்பிரைஸ் ஆக தாய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூற திட்டமிட்டிருந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக விபத்தில் சாதே பலியாகி விட்டார்.

விமானியின் அனுபவத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு

விபத்தில் இறந்த பைலட் தீபக் வசந்த் சாத்தே இந்திய விமானப்படையில் பைலட்டாக 22 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். தேசிய ராணுவ அகாடமியில் படித்த இவர் 1981 ஜூன் 11ல் விமானப்படையில் சேர்ந்தார். விங்க் கமாண்டர் பொறுப்புவரை உயர்ந்த இவர் 2003 ஜூன் 30ல் ஓய்வுபெற்றார். அதன்பின் இந்தியன் ஏர்லைன்சில் பணியில் சேர்ந்தார். இவர் விமானப்படையில் பணிபுரிந்தபோது பலமுறை சிறந்த பைலட்டுக்கான விருதுகளை பெற்றுள்ளார். இவரது அனுபவத்தால் தான் ெபரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

சிஐஎஸ்எப் வீரர்கள் தனிமைப்படுத்தல்

விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 2 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதைத் தொடர்ந்து, மீட்பு பணியில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மீட்பு பணியில் ஈடுபட்ட அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

பறவை மோதியது பயணிகள் தப்பினர்

கோழிக்கோடு விமான விபத்து நிகழ்ந்துள்ள நிலையில், நேற்று ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து மும்பை நோக்கி புறப்பட்ட ஏர் ஏசியா விமானத்தின் மீது பறவை மோதியது. இதனால் உடனடியாக அந்த விமானம் தரை இறக்கப்பட்டதால் பயணிகள் தப்பினர்.  விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட பயணிகள் அனைவரும் வேறு விமானம் மூலம் மும்பை அனுப்பி வைக்கப்பட்டனர்.

காயமடைந்தவருக்கு கொரோனா

விமான விபத்தில் காயமடைந்த ஒருவருக்கும், மரணமடைந்த ஒருவருக்கும் கொரோனா உறுதி  செய்யப்பட்டுள்ளது. எனவே, மீட்புப்பணியில் ஈடுபட்ட அனைவரும் மருத்துவமனைகளில் இருந்தவர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள    வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: