குமரியில் கடல் சீற்றம்!: அழிக்கால் கிராமத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி; 2 பேர் படுகாயம்..!!

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் அழிக்காலில் கடல் சீற்றம் காரணமாக வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். அழிக்கால் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பருவமழை காலங்களில் ஏற்படும் கடல் சீற்றத்தின் போது வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்துவிடுகிறது. கடல் நீர் வீடுகளுக்குள் வருவதை தடுக்க மணல் மூட்டைகள் கொண்டு தடுப்பு அமைத்த போது சுவர் இடிந்து விழுந்ததில் அஷ்வின் என்ற மீனவர் உயிரிழந்தார். மேலும், 2 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த கோட்டாட்சியரை முற்றுகையிட்டு கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈட்பட்டதால் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து அக்கிராம மக்கள் தெரிவித்ததாவது, இந்த கடல் அரிப்பினால் தங்களுடைய வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்டது. கடல் சீற்றம் காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் வந்து விடுகிறது. தொடர்ந்து, கோவில், மண்டபம் உள்ளிட்டவற்றில் தஞ்சம் புகும் நிலைமை ஏற்படுகிறது. இதனால் கிராம மக்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றனர். இதற்கு அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். கடல் அரிப்பில் இருந்து வீடுகளை பாதுகாக்க தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்பது அழிக்கால் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இதற்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல ஆண்டுகளாகியும் இதுவரை பணிகள் முடிவடையவில்லை. அழிக்கால் கிராமமே மண்ணோடு புதைவதற்குள் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்பது மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: