ஆற்றில் நீர்ச்சுழலில் சிக்கிய சிறுவர்களை காப்பாற்றும் முயற்சியில் உயிரை இழந்த சீக்கியர்: வேலை தேடிச் சென்றவருக்கு பரிதாபம்

நியூயார்க்: அமெரிக்காவில் ஆற்றில் விழுந்து உயிருக்கு போராடிய 3 சிறுவர்களை காப்பாற்ற முயன்ற சீக்கியர் ஆற்றில் மூழ்கி பலியானார். இந்தியாவில் இருந்து கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா சென்ற மன்ஜித் சிங், அங்கு லாரி நிறுவனம் ஒன்றை நடத்த பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில், அவர் கடந்த புதன்கிழமை அவரது நண்பர்களுடன் பிரெஸ்னோ மாவட்டத்தில்  உள்ள கிங்ஸ் ஆற்றங்கரையில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, ஆற்றில் நீச்சல் அடித்து விளையாடி கொண்டிருந்த 8 வயது சிறுமிகள் இருவர், 10 வயது சிறுவனும் ஆற்று மேம்பாலத்தின் கீழ் ஏற்பட்ட நீர்ச்சுழலில் சிக்கி உயிருக்கு போராடினர். இதைக் கண்ட சிங் தனது தலைப்பாகையை அவிழ்த்து, துண்டு போல் நீட்டி அவர்களை காப்பாற்ற முயன்றார்.

அவர்கள் அதனை பிடித்து ஏறுவதற்கு முயன்றபோது சிங்கும் நீருக்குள் இழுக்கப்பட்டார். இதில் அவரும் நீர்ச்சுழலில் சிக்கி கொண்டார். அருகில் இருந்தவர்கள் சிறுவனையும் ஒரு சிறுமியையும் காப்பாற்றினர். மற்றொரு சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.ஆற்றில் 40 நிமிட தேடலுக்கு பிறகு கண்டெடுக்கப்பட்ட மன்ஜித் சிங், பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தார். அருகில் உள்ள மருத்துவனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சோக சம்பவம் அவர் வசிக்கும் ரீட்லி பீச் பகுதியினரை, குறிப்பாக இந்திய வம்சாவளியினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Related Stories: