ஆந்திராவில் ஜெகன் திட்டம் மேலும் 12 மாவட்டங்கள் உருவாக்க தீவிர ஏற்பாடு

திருமலை: ஆந்திராவில் ஏற்கனவே உள்ள மாவட்டங்களை பிரித்து, கூடுதலாக 12 மாவட்டங்கள் உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தெலங்கானா மாநில பிரிவினைக்கு பிறகு, ஆந்திராவில் 13 மாவட்டங்கள் மட்டுமே உள்ளன. இம்மாநிலத்தில் ஜெகன் மோகன் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு, மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போவதாக அவர் அறிவித்தார். அதன்படி, கடந்த மாதம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கூடுதலாக 12 மாவட்டங்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக, ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியையும் ஒரு மாவட்டமாக பிரிக்கலாம் என ஆலோசனையில் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், ஒரு சில நிர்வாக பிரச்னை மற்றும் எல்லை வரையறையில் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாவட்டங்களை எப்படி பிரிக்க வேண்டும் என்பதை பரிந்துரை செய்வதற்காக, முதன்மை செயலாளர் நீலம் சஹானி தலைமையிலான சிறப்புக்குழுவை அரசு நியமித்தது.  இக்குழுவினர் கடந்த ஒரு மாதமாக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் விதமாக மாவட்டங்களை பிரிப்பதற்கான அறிக்கையை தயார் செய்து வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கை வந்தவுடன் மாவட்டங்கள் பிரிக்கப்பட உள்ளது.

Related Stories: