×

புதுப்பிக்கத்தக்க ஆற்றலா? அப்படின்னா? எதுவுமே தெரியல, புரியல...

* 55 சதவீத மாணவர்கள் நிலை பரிதாபம் நாடு முழுவதும் நடந்த ஆய்வில் அதிர்ச்சி

புதுடெல்லி: புதுப்பிக்கத்தக்க ஆற்றல் குறித்து நாடு முழுவதும் மாணவர்களிடையே ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 55 சதவீத மாணவர்களுக்கு எதுவும் தெரியாதது மட்டுமல்ல, எதையும் பயன்படுத்தாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்பது சூரிய ஒளி, காற்று, மழை, கடல் அலை, புவிவெப்பம் போன்ற இயற்கை வளங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ஆற்றலாகும். இதை அதிகம் பயன்படுத்தி இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்று ஆண்டாண்டு காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2006ம் ஆண்டில் சுமார் 18% உலக ஆற்றல் நுகர்வு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து பெறப்பட்டது. 2016ல் 19.2% அளவுக்குத்தான் இருந்தது. வளர்ந்த நாடுகளில் காற்று, நீர், சூரிய சக்தியில் அதிக அளவு முதலீடு செய்யப்பட்டது. சில நாடுகள், நாட்டின் முழு ஆற்றல் பயன்பாட்டுக்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளத்தையே பயன்படுத்துகின்றன. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடுகள் இப்போது மிகவும் சிக்கனமானதாகவும், எளிமையானதாகவும் மாறிவருகின்றன. மொத்த ஆற்றல் நுகர்வில் இதன் பங்களிப்பு தொடர்ந்து கூடிக்கொண்டே வருகிறது. நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் பயன்பாடு இந்த ஆண்டு பெரும் அளவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதற்குப்பதில் சூரிய ஆற்றலும், காற்றின் ஆற்றலுமே மாற்று சக்தியாக அமைந்தது.

அதுவும், கொரோனா காலத்தில் உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் மூலம் இயற்கை தன்னை ஒரு முறை புதுப்பிக்க வழி அமைத்துக்கொடுத்தது. காற்று மாசுவால் ஆண்டு தோறும் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை விடவேண்டிய நிலையில் இருந்த டெல்லி ஊரடங்கில் முழு சுத்தம் அடைந்தது. காற்றின் தரம் மேம்பட்டது. யமுனை உள்ளிட்ட இயற்கை வளங்கள் சுத்தமானது. ஆனால் ஊரடங்கு விலக்கு அமல்படுத்தப்பட்டதால் ஒரே மாதத்திற்குள் யமுனை அசுத்தப்பட்டு நிற்கிறது. டெல்லி மக்களுக்கு குடிநீர் வழங்கக்கூட முடியாத அளவுக்கு, தண்ணீரை சுத்திகரிக்க முடியாமல் அரசு திணறிப்போய் உள்ளது. இந்த நிலையில், மத்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களிடம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் குறித்து ஆன்லைனில் கருத்து கேட்பு நடத்தியது. 28 மாநிலங்களில் உள்ள நகர்புற மற்றும் கிராமப்புறங்களில் 5 முதல் 12 வரை படிக்கும் மாணவர்கள் 47 ஆயிரம் பேரிடம் இந்த கருத்து கேட்பு நடத்தப்பட்டது.

டெல்லியில் மட்டும் 8 ஆயிரம் மாணவர்கள் இதில் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இதில், 55 சதவீத மாணவர்கள் எந்த வகையிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்தவில்லை. மேலும், அதுபற்றி அவர்களுக்கு தெரியவில்லை என்பது தெரிய வந்துள்ளது. பயன்படுத்திய மாணவர்களிலும் 96 சதவீதம் பேர் வீடுகளில் உள்ள மின்சக்திக்காக பயன்படுத்தி உள்ளனர். 67 சதவீதம் பேர் மறு சுழற்சி அல்லது உணவு மிச்சங்களை மறுபயன்பாட்டுக்காக உபயோகப்படுத்தி உள்ளனர். 51 சதவீதம் பேர் வாகன பயணத்திற்கு பதில் நடந்தும், சைக்கிளில் சென்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் பங்கெடுத்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

Tags : Renewable energy,Well, Nothing to know, nothing , understand ...
× RELATED எரிசக்தித்துறை சார்பில் ரூ.353 கோடி...