சைக்கிள் ஷேரிங் திட்டம் விரிவாக்கம் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்: ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் அறிவிப்பு

சென்னை: சென்னையில் சைக்கிள் ஷேரிங் திட்டம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக பொதுமக்கள் தங்களின் கருத்துகளை இணையதளம் மூலம் தெரிவிக்கலாம் என்று சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், பொது போக்குவரத்து முடங்கி உள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் குறைந்த அளவிலான பொது போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தனி மனித இடைவெளி கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தின் காரணமாக பொது போக்குவரத்தை முழுமையாக இயக்க முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், தனிமனித இடைவெளியை பின்பற்றி சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியது. குறிப்பாக பொதுமக்களிடம் சைக்கிள் பயன்படுத்தும் பழக்கத்தை ஊக்குவிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக INDIA CYCLES 4 CHANGE CHALLENGE என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்க 100 ஸ்மார்ட் சிட்டி நிறுவனங்கள் சார்பில் சமர்ப்பிக்கப்படும் திட்டங்களை ஆய்வு செய்து, சிறந்த 8 திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க முடிவு செய்தது.

அதன்படி சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் சமர்ப்பிக்கவுள்ள திட்டம் தொடர்பாக சென்னையில் ஆய்வு ஒன்றை நடத்தவுள்ளது. இந்த ஆய்வில் சென்னையில் சைக்கிள் பயன்படுத்துவதில் உள்ள சிரமங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சென்னை ஸ்மார்ட் சிட்டியின் சமூக வதள பக்கங்களின் மூலம் கருத்துகளை தெரிவிக்கலாம். பொதுமக்கள் அளிக்கும் கருத்துகளின் அடிப்படையில் சென்னையில் சைக்கிள் ஷேரிங் திட்டம் விரிவுபடுத்தப்படும். சென்னை மாநகராட்சியில் சிறப்பு திட்டங்கள் துறையின் கீழ் உள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஏற்கனவே ஸ்மார்ட் பைக் நிறுவனம் சைக்கிள் ஷேரிங் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தற்போது 50க்கும் மேற்பட்ட இடங்களில் சைக்கிள் நிலையங்கள் உள்ளன. இவற்றில் கொரோனா பாதிப்பிற்கு பின்பு தற்போது 13 சைக்கிள் நிலையங்கள் மீது பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

Related Stories: