வெளி மாவட்டம், வெளி மாநிலம் செல்வதற்கு இ- பாஸ் பெறும் நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது : மாநகராட்சி ஆணையர் தகவல்

பெரம்பூர்: சென்னையில் இருந்து வெளி மாவட்டம், வெளி மாநிலம் செல்வதற்கு இ- பாஸ் பெறும் நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி மற்றும் நீலம் அமைப்பு சார்பில் கொரோனா சமூக விழிப்புணர்வு செயல் திட்ட நிகழ்ச்சி அயனாவரத்தில் நேற்று  நடந்தது. இதில், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பங்கேற்று நீலம் அமைப்பை சேர்ந்த சிறுவர் சிறுமியர் வரைந்த ஓவியங்கள் மற்றும் விழிப்புணர்வு கோலங்களை பார்வையிட்டார்.  பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் தற்போது வரை 8 லட்சம் கொரோனா பரிசோதனைகளை நெருங்கியுள்ளோம்.  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விரைவில் 5 சதவீதமாக குறைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம். சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள அம்பத்தூர், அண்ணாநகர், கோடம்பாக்கம், வளசரவாக்கம்  மண்டலங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம்.

சென்னையில் தற்போது 24 பாதுகாக்கப்பட்ட பகுதிகள்  உள்ளன. மொத்தம் 16 லட்சம் பேர் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 12 லட்சம் பேர் குணமடைந்து, 4 லட்சம் பேர் மட்டுமே வீட்டு தனிமையில் உள்ளனர். சென்னையில் 2,800 இறைச்சிக் கடைகள் உள்ளன.  விலை குறைவாக வாங்கலாம் என்பதற்காக பொதுமக்கள் வார இறுதி நாட்களில் காசிமேடு மீன் மார்க்கெட்டுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். வீட்டின் அருகில் உள்ள கடைகளில் மீன், இறைச்சி வாங்கினாலே நோய் தொற்று 99 சதவீம் குறையும்.

பொது போக்குவரத்து மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வர் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டு அவர்கள் அதுபற்றி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  பொது போக்குவரத்தை எப்போது இயக்கலாம் என்பது பற்றி அவர்கள் தான்  முடிவு செய்வார்கள்.

இ-பாஸ் வழங்கும் முறை 2 வகையாக எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது.  தொழில் ரீதியாக மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் வருவதற்கு ஆன்லைனில் இ-பாஸ் பெறும் வசதி எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது. ஆதார் அட்டையோடு பயணத்திற்கான காரணத்தை கூறி இ-பாஸ் பதிவு செய்தால் நிச்சயம் அனுமதி கொடுக்கப்படும். தற்போது 30- 35 சதவீதம் வரை இ-பாஸ் கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது. இடைத்தரகர்கள் மூலம் எளிதில் இ-பாஸ் கிடைக்கும் என நம்பி அவர்களிடம் பணம் கொடுத்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

அனுமதி இல்லை

அயனாவரத்தில் தனியார் அமைப்பு சார்பில் நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சி மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் சுகாதார ஊழியர்கள், சிறுவர்கள் இருந்தனர். பொதுமக்களை உள்ளே அனுமதிக்கவில்லை. அதனால் அவர்கள் மைதானத்திற்கு வெளியே நின்று கலைநிகழ்ச்சிகளை வேடிக்கை பார்த்தனர். சமூக இடைவெளியுடன் எங்களையும்  உள்ளே அனுமதித்து இருந்தால், நாங்களும் நிகழ்ச்சிகளை பார்ப்போம். ஆனால் எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை என பொதுமக்கள் கூறினர்.

Related Stories: