மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சென்னை: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் தொழிற்சங்கத்தினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து தொழிற்சங்கங்களின் கலந்தாய்வுக் கூட்டம் கடந்த மாதம் நடந்தது. இதில், தொமுச, ஹெச்எம்எஸ், ஏஐடியுசி, சிஐடியு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர். அப்போது மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. சென்னை, பல்லவன் இல்லம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் தொமுச, ஹெச்எம்எஸ், ஏஐடியுசி, சிஐடியு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அதிக காலம் நீடித்து விட்ட பொதுமுடக்கத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வரவேண்டும். தொழிலாளர் சட்டங்களை முற்றாக நீக்குவது. நான்கு தொகுப்புகளாக குறுக்குவது, வேலை நேரத்தை 12 மணியாக அதிகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும். மின்சார திருத்தச்சட்டத்தை கைவிட வேண்டும்.

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு அறிக்கை 2020யை நிறைவேற்றக்கூடாது. வேலை நீக்கம், சம்பள வெட்டு, வேலை நேரத்தை அதிகரிக்கிற முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும். அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும். நிரந்தர, கேஷுவல், காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் அனைவருக்கும் பொது முடக்க காலத்திற்கு முழுச் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. இதேபோல், தமிழகம் முழுவதும் ஆங்காங்குள்ள பணிமனைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட  இடங்களின் முன்பு சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். அப்போது மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.

Related Stories: