கொரோனா காலத்தில் தமிழகத்தில் எத்தனை மருத்துவர்கள் இறந்தார்கள் என்பதை அமைச்சர் அறிவிப்பாரா?

சென்னை: கொரோனா காலத்தில் நாடு முழுவதும் இறந்த மருத்துவர்களில் தமிழகத்தில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பதை அமைச்சர் அறிவிப்பாரா என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:  கொரோனா காலத்தில் தினமும் பல மருத்துவர்கள் உயிரிழந்து வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

இதுவரை இந்தியாவில் மரணம் அடைந்த மருத்துவர்கள் 175 பேர் என்றும், அதில் தமிழகத்தைச் சேர்ந்தவர் 43 பேர் என்றும் செய்தி வந்தது.  அதனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுத்தார். இந்தியா முழுவதும் இதுவரை 196 மருத்துவர்கள் இறந்துள்ளதாக இன்று ஐ.எம்.ஏ தகவல் தந்துள்ளது. இவர்களில் எத்தனை பேர் தமிழக மருத்துவர்கள் என்பதை அமைச்சர் அறிவிப்பாரா?. மரணங்களைத் தடுக்கும் வழி என்பது மரணங்களை மறைப்பது அல்ல.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற விவசாயி மகளுக்கு வாழ்த்து திமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:

நீலகிரி கோத்தகிரி கக்குளா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுந்தரம் மற்றும் செவிலியராகப் பணிபுரியும் சித்ராதேவி இணையரின் மகள் மல்லிகா, இந்தியக் குடிமையியல் தேர்வில் (யுபிஎஸ்சி) இந்திய அளவில் 621வது இடம் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார். அவரை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, வாழ்த்து மடல் ஒன்றிணையும் எழுதினார்.

இதையடுத்து, சமூகரீதியாக பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவது தனது வெற்றிக்கு மிகவும் உதவிகரமாக இருந்ததாகவும், அந்த வகையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கிய முத்தமிழறிஞர் கலைஞருக்கும், தன்னைத் தொலைபேசியில் அழைத்து வாழ்த்துச் சொன்ன மு.க.ஸ்டாலினுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக மல்லிகா கூறினார்.

Related Stories: