கேரளாவில் மண்சரிவு, விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

சென்னை: கேரளாவில் மண்சரிவு மற்றும் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  கி.வீரமணி ( திராவிடர் கழக தலைவர்): கேரள மாநிலம் தொடர்ந்து எத்தனையோ புயல், வெள்ளம், கரோனா மற்றும் இத்தகைய விபத்துகளைச் சந்தித்து வருவதும் அதனைத் துணிவுடன் எதிர்கொண்டு ஒரு மக்கள் நல அரசாக நடந்து கொள்ளுவதும் ஆறுதல் அளிக்கத்தக்க நடவடிக்கையாகும். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும். வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): கேரள மாநிலத்தில் உள்ள தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் தங்கி இருக்கின்ற குடியிருப்புகள் பாதுகாப்பாக இல்லை என்பதை இந்த நிலச்சரிவு படம்பிடித்துக் காட்டி இருக்கின்றது. அந்தக் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு கிடைத்திட கேரள அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

கே.எஸ்.அழகிரி ( தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ): பிழைப்பிற்காக தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் அப்பாவி 85 தமிழர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கின்றனர். மண் சரிவில் பலியான குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கலைத் தெரிவித்து விட்டு எந்த இழப்பீடும் அறிவிக்கவில்லை. கோழிக்கோடு விமான நிலைய விபத்தில் 18 பேர் பலியாகிவுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகிவுள்ளது. விமான விபத்தில் பலியான 18 பயணிகளின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஜி.கே.வாசன் ( தமாகா தலைவர்):  கேரளா மாநிலம் மூணாறு அருகே கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் தமிழகத்தைச் சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 50பேருக்கு மேல் மண்ணில் புதைந்தனர் என்ற செய்தி, மிகவும் அதர்ச்சியாகவும், வேதனையாகவும் இருக்கிறது.

நிலச்சரிவில் உயிரிழந்த குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.அன்புமணி (பாமக இளைஞர் அணி தலைவர்): கேரள மாநிலத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரு துயரங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, கேரள அரசுக்கு தேவையான உதவிகளை வழங்க தமிழக அரசும், மத்திய அரசும் முன்வர வேண்டும்.எல்.முருகன்(பாஜக தலைவர்): பல்வேறு கனவுகளோடு தாய் மண் திரும்பியவர்கள், உயிரிழந்தது மிகுந்த வேதனையளிக்கிறது. இறந்துள்ளவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்தவர்கள் முழுமையாக குணமடைந்திட பிரார்த்திக்கிறேன்.

சரத்குமார் ( சமக தலைவர்): மண் சரிவிலும், விமான விபத்திலும் உறவினர்களை இழந்து வேதனையில் வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதைப்போன்று தமிழக முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் இரங்கல் தெரிவித்துள்ளார்.டிடிவி.தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்): தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கேரள மாநிலம் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தூத்துக்குடி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட 25க்கும் மேற்பட்ட தமிழர்கள் உயிரிழந்திருப்பதாக வரும் செய்தி மிகுந்த மன வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து நிகழும் இத்தகைய சம்பவங்களை தடுப்பதற்கான தொலைநோக்கு திட்டங்களை கேரள முதல்வர் செயல்படுத்திட வேண்டும். மேலும், கோழிக்கோடு விமான விபத்து பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

Related Stories: