×

கொரோனா சூழலை பயன்படுத்தி இ-பாஸ் வழங்க லஞ்சம் தமிழக அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்

* ரத்ததாகம் கொண்ட ஓநாய்களாக அலைபவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என அறிவுரை

சென்னை: கொரோனா சூழலை பயன்படுத்தி இ-பாஸ் வழங்க லஞ்சம் பெறுவதை சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. ரத்த தாகம் கொண்ட ஓநாய்களாக செயல்படும் ஊழல் அரசு ஊழியர்களை  இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.  திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்டுள்ள  திருவண்ணாமலையைச் சேர்ந்த 8 முதல் 12ம் வகுப்பு  மாணவிகளை மீட்க கோரி,  திருவண்ணாமலையைச் சேர்ந்த  தமிழ் தேசிய மக்கள் கட்சி தலைவர் சி.எம்.சிவபாபு தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து இ-பாஸ் இல்லாமல் மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

 இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், முறையாக விண்ணப்பித்தவர்களால் இ-பாஸ் பெற இயலாத நிலையில், புரோக்கர்கள் மூலம் 500 ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெற்று அதிகாரிகள் இ-பாஸ்கள் வழங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பத்திரிகைகளும் இ-பாஸ் முறைகேடு குறித்து செய்திகளை வெளியிடுகின்றன.
 இந்த நிறுவனத்தில் மட்டுமல்ல திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் உள்ள பல நிறுவனங்களில் இதேபோல் குழந்தை தொழிலாளர்கள் அதிகம் உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த நிறுவனத்தில் பணியாற்றும் 331 பேரில் 133 பேர் 14 லிருந்து 18 வயதுக்குட்பட்டவர்கள்.  இவர்களை ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வேலைக்கு அமர்த்தி அதற்கு தரப்படும் சம்பளத்தை வைத்து அவர்கள் படிக்கிறார்கள் என்று நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. புரோக்கர்கள் மூலம் ஏழை குழந்தைகளை இப்படி சட்டவிரோதமாக பணிக்கு அழைத்து வருகிறார்கள். இந்த குழந்தைகளில் பலர் பிளஸ் 2 எழுதிவிட்டு தேர்வு முடிவைக்கூட பார்க்க முடியாத நிலையில் உள்ளதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் இவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து எப்படி திருப்பூர் மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்டார்கள். முறையான இ-பாஸ் இல்லாமல் அழைத்து வரப்பட்டுள்ளனர். புரோக்கர்கள் மூலம் இ-பாஸ் பெற்று இவர்களை அழைத்து வந்ததாக தெரியவந்துள்ளது.

 கொரோனா காலத்தில் உள்ள சூழலை பயன்படுத்தி லஞ்சம் பெற்று இ-பாஸ் வழங்கியுள்ளனர். கொரோனா பரவல் காலத்தில் ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல செயல்படும் ஊழல் அரசு ஊழியர்களுக்கு எதிராக தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  நூற்பாலைகளில் இருந்து மீட்கப்பட்ட மாணவிகளை குழந்தைகள் நலக் குழுக்கள் மூலம் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனரா என்று கண்காணிக்க காவல்துறை, தொழிலாளர் நலத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் நலக்குழுக்கள் திடீர் சோதனைகளை நடத்த வேண்டும். வழக்கு வரும் 20ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

Tags : government ,Tamil Nadu ,ICourt , ICourt condemns, Tamil Nadu government , providing e-pass ,corona environment
× RELATED வைகை, காவேரி, குண்டாறு இணைப்பு தமிழக...