வன்கொடுமை தடுப்பு கண்காணிப்பு குழு கூட்டம் நடத்தக்கோரி வழக்கு: தமிழகஅரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள மாநில, மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டத்தை நடத்த உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு  பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோயம்புத்தூரை சேர்ந்த வக்கீல் பன்னீர்செல்வம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடியினர் மீதான தீண்டாமையை தடுப்பதற்காக கடந்த 1989ம் ஆண்டு மத்திய அரசு வன்கொடுமை தடை சட்டம் கொண்டுவந்தது.  இதுதொடர்பாக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு மாநில அளவில் ஆண்டுக்கு இரு முறையும் மாவட்ட அளவில் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும் கூடி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்துவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிப்பது ஆகியன தொடர்பாக கலந்தாலோசித்து மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் மார்ச் 31ம் தேதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆனால், தமிழகத்தில் அதுபோன்ற கண்காணிப்புக் குழு கூட்டங்கள் நீண்ட ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இந்த ஊரடங்கு காலகட்டத்தில் கொலை, ஆணவக் கொலை, சாதி ரீதியிலான அடக்குமுறை போன்றவற்றால் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மக்கள் பாதிக்கப்பட்டு 50க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இது தொடர்பாக தமிழக அரசுக்கு கடந்த ஜூன் மாதம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மாநில மற்றும் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவை கூட்டுமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு  குறித்து தமிழக அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை வரும் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: