பி.ஆர்க் படிப்பில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான 15% இட ஒதுக்கீடு அறிவிப்பை வெளியிட வேண்டும்: அண்ணா பல்கலைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கிண்டியில் உள்ள கட்டிடக் கலை கல்லூரியில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டில், பி.ஆர்க் மாணவர் சேர்க்கை கோரி விண்ணப்பிக்க அனுமதி மறுத்ததை எதிர்த்து, சிங்கப்பூரைச்  சேர்ந்த ஷிவானி அருண் என்ற மாணவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான 15 சதவீத இட ஒதுக்கீடு என்பது, அனுமதிக்கப்பட்ட மொத்த மாணவர்கள் எண்ணிக்கையில் வழங்க வேண்டுமா அல்லது கூடுதலாக வழங்க வேண்டுமா என்று கட்டிடக்கலை கவுன்சில் முடிவை அறிவிக்காததால், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கட்டிடக்கலை கவுன்சில்  தரப்பில் ஆஜரான வக்கீல், மொத்த மாணவர்கள் இடங்களில் 15 சதவீதத்தை வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வழங்க வேண்டும் என்று அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.இதை பதிவு செய்த நீதிபதி, கட்டிடக்கலை கவுன்சில் அறிவுறுத்தலின் அடிப்படையில், பி.ஆர்க். படிப்பில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக 2 வாரங்களில் அறிவிப்பாணையை வெளியிட வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டார்.

Related Stories: