லஞ்ச ஊழலை அதிகப்படுத்தியுள்ளதால் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும்

* தமிழகம் முழுவதும் போராட்டம்

* போக்குவரத்து தொழிலாளர்கள் தீர்மானம்

சென்னை: தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளன மாநிலக்குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 4 மாதங்களாக தமிழகத்தில் பொது போக்குவரத்து வாகனங்களை இயங்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக சுமார் 30 லட்சம் மோட்டார் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.கொரோனா நிவாரணமாக அரசு வழங்கிய ₹2,000 மற்றும் அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களும் பெரும்பகுதியான தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை. எனவே கொரோனா நிவாரண நிதியாக மாதம் ஒன்றுக்கு ₹7500 வீதம் அனைத்து மோட்டார் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பயணிகள் பேருந்து தவிர ஆட்டோ, டாக்ஸி, கால் டாக்ஸி, சரக்கு வாகனங்கள் இயங்கலாம் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் அரசின் அறிவிப்பால் எந்த பலனும் இல்லை. டாக்ஸி, கால் டாக்ஸி, சுற்றுலா வாகனங்கள் போன்றவை மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ-பாஸ் கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது.

ஆனால் மக்கள் நியாயமான காரணங்களுக்கு கூட இ-பாஸ் பெற முடியவில்லை. இ-பாஸ் என்பது லஞ்ச ஊழலையே அதிகப்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் பாஸ் பெறமுடியாத நிலையில் வாடகை வாகனங்கள் இயங்க முடியாத சூழ்நிலையே உள்ளது. எனவே இ-பாஸ் நடைமுறையை மாநில அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். சில மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைந்துள்ளன. அதுபோல் தமிழக அரசும் குறைக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 14ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் குடும்பத்துடன் கோரிக்கை அளிக்கும் போராட்டத்தை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: