சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதானவர் கொரோனா பாதித்த எஸ்ஐக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை: அனுமதி கேட்டு மனைவி மனு

மதுரை: சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, கொரோனா பாதிக்கப்பட்டுள்ள கணவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உதவவேண்டும் என எஸ்ஐ மனைவி மதுரை போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் எஸ்ஐ பால்துரை கொரோனா வைரஸ் பாதிப்பால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பால்துரையின் மனைவி திலகா, மதுரை போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் நேற்று மனு அளித்தார். அதில், ‘‘எனது கணவருக்கு சர்க்கரை, ஆஸ்துமா மற்றும் கொரோனா தாக்கத்தால் உடல் நிலை மோசமாகி, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சையில் முன்னேற்றம் இல்லை. அவரின் உயிரைக் காப்பாற்ற வேண்டும். எனது சொந்த செலவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உள்ளேன். தமிழக காவல்துறையில் 30 வருடமாக பணியாற்றி தற்சமயம் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உதவ வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

Related Stories: