குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழல் உருவான பிறகே பள்ளிகள் திறக்கப்படும்: சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சேலம்: கொரோனா பரவல் குறைந்து, குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழல் உருவான பிறகே தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நேற்று தெரிவித்தார். சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும்,கொரோனா நோய்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பின்னர் அளித்த பேட்டி: கொரோனா தொற்று பாதிப்பு குறைய வேண்டும். குழந்தைகள் மீது கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. பள்ளிகள் திறப்பு குறித்து இந்தியா முழுவதும் என்ன நிலைப்பாடு எடுக்கப்படுகிறதோ, அதன்படி தமிழக அரசும் நடவடிக்கை எடுக்கும். கொரோனா பரவலில் இருந்து, பாதுகாப்பான சூழல் உருவான பிறகே பள்ளிகள் திறக்கப்படும்.

 தமிழகத்தில் தற்போதுள்ள அதிமுக கூட்டணி தொடருமா என்பது குறித்து, தேர்தல் வரும் போது பேசலாம். தமிழக அரசு இரு மொழிக்கொள்கை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை , சுற்றுச்சூழல் பாதுகாப்பு திருத்த சட்டம் குறித்து ஆலோசிக்க தமிழக அரசின் சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. எஸ்.வி.சேகரை ஒரு பொருட்டாக கருதவில்லை என்றார்.

‘மக்கள் அனாவசியமாக பயணம் செய்வதால் இபாஸ் தொடரும்’

முதல்வர் எடப்பாடி கூறுகையில், தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை எளிமைப்படுத்தும் வகையில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. அனாவசியமாக நிறைய பேர் செல்கிறார்கள்.  அதை தடுப்பதற்காகத்தான் இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளது. அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோருக்கு உடனடியாக இ-பாஸ் வழங்க மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு இ-பாஸ் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். வெளிமாநில தொழிலாளர்களுக்காக விண்ணப்பிக்கும் போது, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் அனுமதிக்கப்படுவார்கள். இ-பாஸ் நடைமுறைகளை இன்னும் எளிமையாக்க  நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Stories: