நாகை மாவட்ட குண்டு வெடிப்பில் தேடப்பட்டவர் 14 ஆண்டுகளாக சேலத்தில் பதுங்கி இருந்த வியாபாரி கைது: உளவுப்பிரிவு போலீசார் சுற்றிவளைத்தனர்

சேலம்:  நாகை மாவட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை உளவு பிரிவு போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். நாகை மாவட்டம் வெளிப்பாளையம் தாமரைகுளம் தென்கரை பகுதியில் கடந்த 2006ம் ஆண்டு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இது தொடர்பாக சிவா என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சேலத்தை சேர்ந்த வாலிபர் நெல்லைக்குமார் என்பவருக்கும், தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஆனால் இந்த வழக்கில் தலைமறைவான நெல்லைக்குமாரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் சேலம் ஒருங்கிணைந்த நுண்ணறிவு பிரிவு போலீசாரின் ரகசிய விசாரணையில் வெளிப்பாளையம் குண்டுவெடிப்பில் தேடப்பட்டு வந்த நெல்லைக்குமார், சங்ககிரி பழைய எடப்பாடி ரோடு யாதவர் தெருவில் எலக்ட்ரிக்கல் கடை வைத்திருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் நேற்று சுற்றிவளைத்து கைது செய்து விசாரித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே கொழுந்தட்டு போலார்புரத்தை சேர்ந்த ஜெயக்குமார் (எ) நெல்லைகுமார் (37), கடந்த 2002ம் ஆண்டு நடந்த அரசியல் கட்சி மாநாட்டுக்கு சென்று விட்டு திரும்பும்போது, ஏற்பட்ட மோதலில் இரட்டை கொலை வழக்கில் சிக்கினார். அந்த வழக்கில் கடலூர் சிறையில் இருந்தபோது, வெளிப்பாளையம் சிவாவுடன் பழக்கம் ஏற்பட்டது. மேலும் அங்கிருந்த மணல்மேடு ரவுடியுடனும் தொடர்பு ஏற்பட்டது. சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் சிவா, நெல்லைக்குமாரை அவரது ஊருக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு நடந்த கொலைக்கு பழிக்கு பழியாக ஒருவரை வெடிகுண்டு வீசி கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். இதற்காக வெடிகுண்டு தயாரித்து பதுக்கி வைத்தபோதுதான் குண்டுவெடித்துள்ளது.

இந்த சம்பவத்தில் போலீசார் தன்னை தேடுவதை தெரிந்து கொண்ட நெல்லைக்குமார், அங்கிருந்து தப்பி சேலம் வந்தார். இங்கு ஒரு பெண்ணை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். பின்னர் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரு அரசியல் கட்சியின் நிர்வாகியாகவும் இருக்கிறார். நெல்லைக்குமார் கைது செய்யப்பட்டது குறித்து வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து தனிப்படை போலீசார் நேற்று சேலம் வந்தனர். அவர்களிடம் நெல்லை குமார் ஒப்படைக்கப்பட்டார்.

Related Stories: