ஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு விவகாரம்: மார்க்சிஸ்ட் கட்சி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல்

சென்னை: மருத்துவப் படிப்பில் அகில இந்தியத் தொகுப்புக்கான இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு அளிக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளது.

மருத்துவப் படிப்பில் அகில இந்தியத் தொகுப்புக்கான இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு அளிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்திலும், அடுத்து உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. தமிழக அரசின் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. சென்னை உயர்நீதிமன்றம் இவ்வழக்கில் ஜூலை 27 அன்று தீர்ப்பு வழங்கியது. அத்தீர்ப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மத்திய அரசு, மருத்துவக் கவுன்சிலின் செயலாளர், பல்மருத்துவக் கல்வி இயக்குநர், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஆகிய மூவரைக் கொண்ட குழு அமைத்து மூன்று மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வேறு யாரும் தடையாணை பெறாமல் இருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனுவினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மூத்த வழக்கறிஞர் சுரேந்திர நாத் தாக்கல் செய்துள்ளார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories: