×

வந்தவாசி அருகே கற்கால மனிதர்கள் வாழ்ந்த தடயங்கள் கண்டெடுப்பு: 2000 ஆண்டுகள் பழமையானவை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா, கீழ்நமண்டி கிராமத்தின் மலையடிவாரத்தில், கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் இருப்பதாக கிடைத்த தகவலின்படி, திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் தாசில்தார் ச.பாலமுருகன், ஆய்வாளர்கள் எ.சுதாகர், பழனிச்சாமி, ஏ.வெங்கடேஷ் ஆகியோர் கூட்டாக கள ஆய்வு செய்தனர். அப்போது, கீழ்நமண்டி கிராமத்தின் தெற்குப்பகுதியில் உள்ள குன்றுகள் சூழ்ந்த இடத்தில், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதர்களை புதைத்த ஈமக்காடு இருப்பது தெரியவந்தது. அங்கு, சுமார் 300க்கும் மேற்பட்ட கல் வட்டங்கள் காணப்படுகின்றன.

இந்த கல் வட்டங்களின் நடுவில் மண்ணுக்கடியில் உள்ள ஈமப்பேழையில், இறந்து போன மனிதனின் எலும்புக்கூடுகள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், மண் குடுவைகள், இரும்பு ஆயுதங்கள், பானைகள் ஆகியவற்றை வைத்து புதைத்திருப்பது தெரியவந்துள்ளது. கற்கால மனிதர்களை புதைத்த இடத்தை சுற்றிலும், வட்டமாக சிறு பாறைக்கற்களை பாதியாக புதைத்து அடையாளம் தெரியுமாறு வைப்பது அக்கால வழக்கம். அதன்படியே, இந்த பகுதியிலும் சுமார் 3 மீட்டர் விட்டம் முதல் 5 மீட்டர் விட்டம் வரை பல அளவுகளில் காணப்படுகின்றன. இதுகுறித்து, தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகையில், ‘கீழ்நமண்டி கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டவை, பெருங்கால கல்வட்டங்கள் ஆகும்.

சிறப்புக்குரிய குழிக்குறி பாறைகள் இந்த பகுதியில் நான்கு இடங்களில் உள்ளன. இதேபோல், தென்னிந்தியாவில் கர்நாடகத்திலும், தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, தர்மபுரி பகுதியிலும் கிடைத்திருக்கிறது. கீழ்நமண்டியில் உள்ள பெருங்கற்கால கல்வட்டங்கள் மற்றும் பொருட்கள் சில சிதிலமடைந்துள்ளன. சில கல்வட்டங்களில் உள்ளிருந்த ஈமப்பேழைகள், மண் குடுவைகள், பானைகள் வெளியே சிதறிக்கிடக்கின்றன. தொல்லியல் சிறப்பு வாய்ந்த கீழ்நமண்டி கல்வட்டங்களை, தொல்லியல் துறையினர் முறையாக அகழாய்வு செய்து, பண்டைய தமிழரின் பண்பாட்டை வெளி உலகுக்கு தெரியப்படுத்தவும், பாதுகாக்கவும் வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.

Tags : Vandavasi , Discovery of traces of Vandavasi, Stone Age people
× RELATED அரசு பஸ் கவிழ்ந்து 18 பயணிகள் படுகாயம்; வந்தவாசி அருகே பரபரப்பு