×

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை: பாபநாசம், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

வி.கே.புரம்: நெல்லை தென்காசி  மாவட்ட அணை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சேர்வலாறு அணைநீர் மட்டம் கடந்த 2 நாளில் 25 அடி உயர்ந்தது. குண்டாறு பகுதியில் 51 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது. தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால் நெல்லை, தென்காசி மாவட்டத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 4 நாட்களாக கனமழை  பெய்து வருகிறது. இதனால் அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்று காலை 7 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் தென்காசி மாவட்டத்தில் பெய்த மழையளவு (மி.மீ.) வருமாறு: குண்டாறு-51 மி.மீ., அடவிநயினார் கோவில் அணை-37, சேர்வலாறு அணை-1 , கடனா-12 , ராமநதி 5, கருப்பாநதி 5, ஆய்க்குடி-5.20, தென்காசி- 9.40, செங்கோட்டை- 28, சிவகிரி- 15 மி.மீ. மழையளவு பதிவாகியுள்ளது. குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது.

அணைக்கு வரும் 48 கன அடிநீர் முழுமையாக வெளியேற்றப்படுகிறது. அணைகளில் நீர்மட்டம் வருமாறு: . நேற்று 83.70 அடியாக  இருந்த பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று 89 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 4 ஆயிரத்து 942 கன அடிநீர் வருகிறது. அணையில் இருந்து 804 கன அடிநீர் வெளியேற்றறப்படுகிறது. இதுபோல் சேர்வலாறு அணை நீர்மட்டம்  ஒரேநாளில் 13 அடி உயர்ந்து நேற்று 106 அடியாக இருந்தது. இன்று மேலும் 12 அடி உயர்ந்து அணை நீர் மட்டம் 118 அடியாக உள்ளது. கடந்த 2 நாளில் நீர்மட்டம் 25 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மணிமுத்தாறு அணைக்கு 1039 கனஅடிநீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து 55 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் நீர்மட்டம் 71.35 அடியாக உள்ளது.

Tags : Rainfall ,Western Ghats ,Papanasam ,Manimuttaru Dam , Western Ghats, Rainfall, Papanasam, Manimuttaru Dam, Water level rise
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...