×

வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் வந்தே பாரத் திட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்: மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம்

புதுடெல்லி: வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் வந்தே பாரத் திட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு பெருந்தொற்றாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வந்த நிலையில், தற்போது அன்லாக் 2.0 தொடங்கியுள்ளது. பெரும்பாலான சேவைகளுக்கு அரசு அனுமதி அளித்திருக்கிறது. ஆனால் போக்குவரத்து சேவைகள் துவக்கப்படாததால் வெளிநாடுகளில் சிக்கியிருப்பவர்களை நாடு திரும்ப முடியாத சூழல் நிலவியது.

அவர்களை மீட்கும் விதமாக மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தை தொடக்கி வைத்தது. அந்த திட்டத்தின் கீழ் நூற்றுக் கணக்கான இந்தியர்கள் மீட்டுக் கொண்டுவரப்பட்டனர். அந்த வகையில் நேற்று துபாயில் இருந்து இந்தியர்களை மீட்டுக் கொண்டு வந்த ஏர் இந்தியா விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரை இறங்கிய போது விபத்துக்குள்ளானது. இதனால் வந்தே பாரத் திட்டம் தொடருமா என கேள்வி எழுந்தது. இந்த நிலையில் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை வந்தே பாரத் திட்டம் திட்டம் தொடரும் என மத்திய விமான போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. மேலும், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் விமானங்களில் எந்தவித கோளாறும் இல்லை எனவும் விமான போக்குவரத்து அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.  

முன்னதாக, வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயில் சிக்கியிருந்த இந்தியர்களைத் தாயகம் அழைத்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரவு கோழிக்கோடு கரிப்பூர் டேபிள் டாப் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டது. அப்போது, ஓடுதளத்தின் அருகே கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் திடீர் விபத்துக்கு உள்ளானது. இந்த கோரவிபத்தில் விமானம் இரண்டு துண்டுகளாக உடைந்தது. இந்த விபத்தில் இதுவரை 2 விமானிகள் உள்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Indians ,Central Ministry of Civil Aviation Vande Bharat , Overseas, Indians, Vande Bharat Project, Central Ministry of Aviation
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...