சிக்கித்தவிக்கும் கேரளா; அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. கேரள மாநிலத்தின் கண்ணூர் மாவட்டத்தில், கன மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இடுக்கி, திருச்சூர், பாலக்காடு மற்றும் வயநாடு மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் தொடர்ந்து மழை கொட்டி வருவதால் கண்ணூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால், மாவட்டமே வெள்ளத்தில் மிதக்கிறது. இதேபோல மலப்புரம், வயநாடு மாவட்டங்களிலும் கனமழையின் தாக்கம் தொடர்ந்து வருகிறது. பெரியார் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்ததால், கொச்சியின் அலுவாவில் உள்ள புகழ்பெற்ற சிவாலயம் மழைநீரில் மூழ்கியது. மழை பாதிப்பில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்ரீகாந்தபுரம், செங்கலை, போடிக்கலம் போன்ற இடங்களில் தாழ்வாவன பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

ஸ்ரீகாந்தபுரம் நகரில் வணிக நிறுவனங்கள் பல வெள்ளத்தில் மூழ்கின. செங்கலை பகுதியில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல குடும்பங்கள் இடமாற்றம் செய்யப்பட்டன. தலிபரம்ப இர்டி மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இடுக்கி, வயநாடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கு வரும் 11-ஆம் தேதி வரை ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: