×

சென்னையில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டை குடியிருப்புகள் இல்லாத ராணுவ வெடிப்பொருள் பாதுகாப்பு கிடங்கிற்கு மாற்ற திட்டம்!

சென்னை: சென்னை துறைமுகத்தில் கடந்த 2015ம் ஆண்டு கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 740 டன் அமோனியம்  நைட்ரேட்டானது பறிமுதல் செய்யப்பட்டு துறைமுகத்திற்கு அருகில் வைக்கப்பட்டிருப்பதாக பரபரப்பான செய்தி ஒன்று வெளியானது. இதுதொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது 6 வருடமாக இந்த அமோனியம் நைட்ரேட்டானது பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து லெபனானில் நடைபெற்ற சம்பவத்தை போன்றே சென்னைலும் வெடி விபத்து நடந்து விடுமோ என்ற அச்சம் மக்களிடையே அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக துறைமுக அதிகாரிகளும், சுங்கத்துறை அதிகாரிகளும் வெடிமருந்து வைக்கப்பட்டுள்ள மணலி பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சென்னையை அடுத்த மணலியில் சுங்கத்துறைக்கு சொந்தமான கிடங்கு பகுதியில் சாஃடா எனப்படும் சி.எப்.எஸ் கிடங்களில் தற்போது இந்த 740 டன் அமோனியம் நைட்ரேட்டானது 37 கன்டெய்னர்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டுள்ள கிடங்கிலிருந்து 2 கி.மீ தொலைவுக்கு மக்கள் வாழும் பகுதி இல்லை என சுங்கத்துறை தெரிவித்திருந்த நிலையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தகவல்களில் 700 மீட்டர் தொலைவிலேயே குடியிருப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கிடங்கில் 37 கண்டெய்னர்களில் உள்ள 740 டன் அம்மோனியம் நைட்ரேட்டை இடம் மாற்றும் வரை பலத்த பாதுகாப்பு அமைக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது.  இந்நிலையில், சென்னையில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டை சுங்கத்துறை ஏலத்தில் விட முடியாத நிலையில், குடியிருப்புகள் இல்லாத ராணுவத்துக்கு சொந்தமான வெடிப்பொருள் பாதுகாப்பு கிடங்கிற்கு மாற்ற திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காவல் ஆணையர், வெடிபொருள் பாதுகாப்பு அதிகாரிகள், சுங்கத்துறை இணை ஆணையர், போலீசார் ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. வெடிபொருட்கள் வைக்கக்கூடிய கிடங்கு காஞ்சிபுரம், வேலூர் மாவட்டத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Chennai , Chennai, Ammonium Nitrate, Military Explosives Security Depot, Customs
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...