இரு மொழி கொள்கையே அரசின் நிலைப்பாடு: குழந்தைகளுக்கு எப்போது பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போது பள்ளிகள் திறப்பு...முதல்வர் பழனிசாமி பேட்டி

சேலம்: தனது சொந்த மாவட்டமாக சேலம் சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு  நடவடிக்கைகள், வளர்ச்சி தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை  நடத்தினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, சேலம் மாவட்டத்தில் கொரோனா  பாதித்த 958 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு 2,872 படுக்கை வசதிகள்  தயார் நிலையில் உள்ளன. சேலத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாம் மூலம் 1,31,160 பேர் பயனடைந்துள்ளனர்  என்றார். அரசு அறிவிக்கும் வழிமுறைகளை பின்பற்றினால் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பலாம்.  கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும்.

சேலம் மாவட்டம் முழுவதும் குடிநீர் பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் சேலம்  மாநகர் முழுவதும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள்  நிறைவேற்றப்பட்டுள்ளன; மற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டம் முழுவதும்  குடிமராமத்து பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஓமலூர், சங்ககிரி, எடப்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள  ஏரிகளை நிரம்பும் பணி நடைபெற்று வருகிறது.

மேட்டூர் அணையில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் 4 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன  வசதி ஏற்பட்டுள்ளது. உபரிநீர் வீணாவதை தடுக்க தடுப்பணைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  போக்குவரத்து நெரிசல் இல்லாத மாவட்டமாக சேலத்தை உருவாக்கும் வகையில் பாலங்கள் கட்டும் பணி  நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பிரமாண்டமான கால்நடை ஆராய்ச்சி  மையத்திற்கான பணி நடைபெற்று வருகிறது. கூடுதலாக 5 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு நெல் கொள்முதல்  செய்து வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தொற்றால் இறந்தால் வழங்கப்படும் நிதியுதவி ரூ.25 லட்சமாக  உயர்த்தப்பட்டுள்ளது. இரு மொழி கொள்கையே தமிழக அரசின் நிலைப்பாடு என்று முதல்வர் பழனிசாமி மீண்டும்  திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நீலகிரியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில்  தங்க வைக்கப்பட்டுள்ளனர். இ-பாஸ் வழங்குவதற்காக கூடுதலாக குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் திறக்கப்படும் என்றும்  முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது எஸ்.வி சேகர் எங்கே  சென்றிருந்தார். பிரதமர் மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவே வராத எஸ்.வி.சேகர் ஏன் கட்சியில் இருக்க  வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார். எஸ்.வி.சேகரை எல்லாம் ஒரு பொருட்டாகவே நாங்கள் கருதவில்லை  என்றார்.

Related Stories: