விஸ்டம் டீத்

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

பற்களின் முளைப்புத்திறன் பதின்ம வயதின் தொடக்கத்திலேயே நின்று விடும். இப்படியிருக்க 21 வயதில் முளைக்கும்  ஞானப் பல் (Wisdom teeth) பற்றிய கேள்வி பலருக்கும் இருக்கும். பல் மற்றும் வேர் சிகிச்சை நிபுணர்  ஞானம்.செந்தில்குமரனிடம் இது பற்றிக் கேட்டேன்… “இறுதியாக முளைப்பதால்தான் அதனை ஞானப்பல் என்கிறோம்.  எல்லோருக்கும் 21 வயதில் ஞானப்பல் முளைத்து விடும். மேல் தாடையின் இருபுறங்கள் மற்றும் கீழ்த்தாடையின் இரு  புறங்கள் என நான்கு புறங்களிலும் நான்கு ஞானப்பற்கள் முளைக்கும். எல்லோருக்கும் அந்தப் பல்லுக்கான தேவை  இருக்கிறது என்று சொல்லி விட முடியாது. பற்களின் மறுமுளைப்புத் திறன் நின்றதற்குப் பிறகு, கடைவாய்ப் பற்களில்  ஒன்றை இழக்க நேரிடுகிறது என்று வைத்துக் கொள்வோம்.

அப்போது பற்களுக்கிடையே ஒரு இடைவெளி உண்டாகும். பற்கள் இடைவெளிக்கேற்ப நகர்ந்து செல்லும்  தன்மையுடையவை. கடைவாயின் இறுதியில் முளைக்கும் ஞானப்பல் அந்த இடைவெளியை சமப்படுத்தி விடும்.  அப்படியான தேவை இருப்பவர்களுக்கு ஞானப்பல் நல்லதோர் நண்பன்.  ஒரு சிலருக்கு மரபு ரீதியான பிரச்னை காரணமாக ஞானப் பல் முளைக்காமலேயே போகலாம். ஞானப்பல்லுக்கான  தேவை என்று பெரிதாக எதுவும் இல்லை. நாம் மென்று சாப்பிடுவதற்கு கடைவாய்ப் பற்கள்தான் உதவுகிறது. இருந்தும்  ஞானப் பற்கள் பாதிப்பை ஏற்படுத்தாத வரையிலும் பிரச்னையில்லை.

இறுதியாக முளைப்பதால் ஈறுகளில் அதற்குத் தேவையான இடம் இல்லாமல் போகலாம். இதனால் முளைக்காமல்  எலும்பிலேயே புதைந்து கிடக்கும் வாய்ப்பிருக்கிறது. அப்படியாக புதைந்திருக்கும் பல்லை எடுத்து விடுவது  நல்லது. ஏனென்றால்  அது  வெளியே முளைத்து வர முயற்சித்துக் கொண்டே இருக்கும். அந்த அழுத்தம்  காரணமாக வலி ஏற்படும். வரிசை அமைப்பில் நேராக முளைத்தால்எந்தப் பிரச்னையும் இல்லை. பாதி புதைந்து பாதி  முளைத்தபடி இருப்பதும், நேராக இல்லாமல் பக்க வாட்டில் முளைப்பதும் பிரச்னைதான். அந்தப் பற்களில் உணவுத்  துகள் தேங்கி விடும். அதை பராமரிக்க முடியாது என்பதால் சுலபமாக சொத்தை ஏற்பட்டு விடும்.

அப்படியான பற்களை பிடுங்கி விடுவது நல்லது. ஞானப்பல் இருந்தால் எதற்காவது உதவியாக இருக்கும்.  இல்லையென்றாலும்  பெரிய இழப்பில்லை. பல்லை பிடுங்குவதுதான் தீர்வா என்று கேட்டால் வேறு தீர்வுகளும்  இருக்கின்றன. ஆனால் பிடுங்குவதுதான் உகந்தது. பக்கவாட்டில்  கோணலாக முளைத்திருக்கும் பல்லுக்கு வேர்  சிகிச்சை செய்வது கூட கடினம்தான். பல்லைப் பிடுங்கக் கூடாது என்று நினைப்பவர்களுக்கு வேர் சிகிச்சை  அளிக்கலாம். பொதுவாகவே இரண்டு வேளையும் பல் துலக்க வேண்டும். சாப்பிட்ட பின்  வெந்நீர், கல் உப்பு போட்டு  வாய் கொப்புளிக்க வேண்டும். ஆறு மாதத்துக்கு ஒருமுறை பல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான்  ஞானப்பல் எலும்புக்குள் புதைந்து கிடந்தால் கண்டறிய முடியும். ஈறுகளில் ஏற்பட்டுள்ள ஆறாத புண்களையும்  கண்டறிந்து சிகிச்சையளிக்க முடியும்” என்கிறார் செந்தில்குமரன்.

-கி.ச.திலீபன்

Related Stories: