×

கோவை தனியார் மருத்துவமனையில் ‘பிளாஸ்டிக் சர்ஜரி’ செய்த இலங்கை தாதா: பரபரப்பு தகவல்கள்

கோவை: கோவை பீளமேடு சேரன்மாநகரில் கடந்த மாதம் 3ம் தேதி பிரதீப்சிங் (36) என்பவர் உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் இறந்தவர் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னனான இலங்கை தாதா அங்கோட லொக்கா என்பது தெரிந்தது. அவர் போலி அடையாள அட்டை பெற உதவி செய்ததாக மதுரையை சேர்ந்த பெண் வக்கீல் சிவகாமசுந்தரி (36), ஈரோட்டை சேர்ந்த வக்கீல் தியானேஷ்வரன்(32) மற்றும் லொக்காவுடன் தங்கியிருந்த காதலி அமானி தாஞ்சி(27) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு கோவை போலீசாரிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. ஐ.ஜி. சங்கர் கோவையில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார். லொக்காவுக்கு போலி ஆவணங்கள் தயாரித்தது தொடர்பாக வக்கீல் சிவகாமசுந்தரியின் வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று முன்தினம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை நடத்தி 40க்கும் மேற்பட்ட ஆவணங்கள், இலங்கை பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவருடைய வங்கி கணக்குகளை ஆய்வு செய்தபோது 7 வங்கி கணக்குகளில் ஒரு கோடி ரூபாய் இருப்பு இருந்துள்ளது. இதனை லொக்கா வழங்கினாரா? அல்லது அவரது கூட்டாளிகள் மூலம் இந்த தொகை வழங்கப்பட்டதா? என போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த வங்கி கணக்குகளை முடக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், லொக்கா சினிமாவில் நடிக்க போகிறேன் என கூறி கோவை ஆர்.எஸ்.புரம் கவுலிபிரவுன் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கூறுகையில், ‘‘அங்கோட லொக்கா கடந்த பிப்ரவரி மாதம் மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மருத்துவமனைக்கு சென்ற அவர் என்ன பெயரில் அனுமதிக்கப்பட்டார்?, அவருடன் யாரெல்லாம் வந்தார்கள்? என்ற விவரங்களை சேகரித்து வருகிறோம்’’ என்றனர்.
இதனிடையே, கோவை மருத்துவமனையில் 2 மாத கரு கலைந்த நிலையில் காதலி அமானிதாஞ்சி சிகிச்சை பெற்று வந்தார். நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சென்னை புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இதனிடையே, தாதாவின் கூட்டாளியான மதுரை பெண் வக்கீல் சிவகாமசுந்தரியின் மதுரை கூடல்புதூர் ரயிலார் நகரில் உள்ள வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைப்பற்றினர். மேலும், வக்கீலின் தந்தை தினகரன் (62), தாய் பாண்டியம்மாள், வக்கீலின் முன்னாள் கணவர் வினோத்குமார், அங்கோட லொக்கா தங்கி இருந்த வீடுகளின் உரிமையாளர்கள் 5 பேர் ஆகியோரிடம் தொடர் விசாரணை நடத்தினர்.



Tags : Sri Lankan ,hospital ,Coimbatore , Coimbatore Private Hospital, Plastic Surgery, Sri Lanka Dada
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை