×

பிரதமர் மோடி பேச்சு புதிய தேசிய கல்விக் கொள்கை புதிய இந்தியாவின் அடித்தளம்

புதுடெல்லி: ‘புதிய தேசிய கல்விக் கொள்கையானது புதிய இந்தியாவுக்கான அடித்தளமாகும். ‘என்ன சிந்திக்க வேண்டும்’ என்பதை தற்போதைய கல்வி முறை கற்றுத்தரும் நிலையில், ‘எப்படி சிந்திக்க வேண்டும்’ என்பதை சொல்லித் தருவதே புதிய கல்விக் கொள்கை,’  என பிரதமர் மோடி கூறி உள்ளார். நாடு முழுவதும் 34 ஆண்டு கால கல்வி முறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரும் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கி உள்ளது. இந்த கல்விக் கொள்கைக்கு ஆதரவுகளும், எதிர்ப்புகளும் இருந்து வருகின்றன. இதற்கிடையே, புதிய கல்விக் கொள்கையின் கீழ் உருமாறும் உயர்கல்வி சீர்த்திருத்தங்கள் தொடர்பாக, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் நேற்று நடத்தப்பட்ட மாநாட்டை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்து பேசியதாவது:

தேசிய கல்விக் கொள்கை ஆரோக்கியமான விவாதத்திற்கு வழி வகுத்துள்ளது. இதைப் பற்றி நாம் அதிகமாக ஆலோசிக்கும் போதும், விவாதிக்கும் போதும் அது கல்வித்துறைக்கு பலனளிக்கும். இது எவ்வாறு செயல்படுத்தப்படும் என்ற கேள்விகள் எழலாம். நாம் அனைவரும் ஒன்றாக இதை செயல்படுத்துவோம்.  பல ஆண்டாக கல்வித் துறையில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை. இதனால், ஆர்வம், கற்பனைகளுக்கு ஊக்கம் தரப்படவில்லை. அதற்கு பதிலாக மந்தை சமூகத்தை நோக்கி நாம் வழிநடத்தப் பட்டோம்.

நம் இளைஞர்களிடம் நுண் சிந்தனை திறன் மற்றும் புத்தாக்க சிந்தனையை வளர்ப்பதே எங்கள் நோக்கம். கல்வியின் மீது ஆர்வம் இருந்தால் அது சாத்தியமாகும். இன்றைய நமது கல்வி முறை ‘என்ன சிந்திக்க வேண்டும்’ என்பதையே கற்றுத் தருகிறது. ஆனால், புதிய தேசிய கல்விக் கொள்கை ‘எப்படி சிந்திக்க வேண்டும்’  என்பதை கற்றுத் தருகிறது. இந்தியாவின் திறமைசாலிகள் இந்தியாவிலேயே தங்கி, அடுத்து வரும் தலைமுறையினரின் மேம்பாட்டிற்காக உழைப்பதை உறுதி செய்திட நாங்கள் முயற்சிக்கிறோம்.  புதிய தேசிய கல்விக் கொள்கை கல்வியின் தரத்தை உயர்த்தும். உயர் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இக்கொள்கை புதிய இந்தியாவின் அடித்தளமாகும்.
 இவ்வாறு மோடி கூறினார்.

கைவினை பொருட்களுக்கு ஆதரவு
தேசிய கைத்தறி தினமான நேற்று பிரதமர் மோடி, கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இது குறித்து அவர் தனது டிவிட்டரில், ‘தேசிய கைத்தறி தினத்தில், நமது துடிப்பான கைத்தறி மற்றும் கைவினை துறையுடன் தொடர்புடைய அனைவருக்கும் வணக்கம் செலுத்துகிறேன். அவர்கள் நம் தேசத்தின் பழமையான கைவினைப் பொருட்களை பாதுகாக்க பாராட்டுக்குரிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். நாம் அனைவரும் கைத்தறி, கைவினைப் பொருட்கள் பயன்படுத்தி, தற்சார்பு இந்தியாவுக்கான முயற்சிகளை வலுப்படுத்த வேண்டும்,’ என்று கூறியுள்ளார்.

Tags : speech ,Modi ,foundation ,India , Prime Minister Modi, New National Education Policy, India
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...