×

அந்தமான் அருகே காற்று சுழற்சி தமிழகத்தில் மேலும் மழை பெய்யும்

சென்னை: வங்கக் கடலில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த காற்றழுத்தம் காரணமாக தமிழக கடலோரப் பகுதிகள், தென் மேற்கு பருவமழை காரணமாகவும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று, நீலகிரி மாவட்டத்தில் தேவாலாவில் 360 மிமீ, அவலாஞ்சி, கூடலூர்பஜார் 350 மிமீ, பிறையார் 330 மிமீ, சேருமுல்லை 320 மிமீ, பவானி 260 மிமீ, பந்தலூர், பார்வுட் எஸ்டேட் 250 மிமீ, நடுவட்டம் 220 மிமீ, மழை பெய்துள்ளது. இது தவிர கோவை மாவட்டத்தில் மட்டும் சின்னகல்லார் பகுதியில் 360 மிமீ மழை பெய்துள்ளது. சின்கோனா 290 மிமீ, சோலையார் 240மிமீ, வால்பாறை 230 மிமீ, மழை பெய்துள்ளது.

இந்நிலையில், தென்மேற்கு பருவக் காற்று, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தீவிரம் அடைந்துள்ளதால் நீலகிரி, கோவை, தேனி, மாவட்டங்களில் மலைச் சரிவு பகுதிகளில் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய அதி கனமழை பெய்யும். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்யும். வங்கக் கடலில் அந்தமான் அருகே வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால் சேலம், திருப்பூர், மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும்.

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். தமிழக கடலோரப் பகுதிகளான புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும். இந்நிலையில், குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 50 கிமீவேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் அங்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அதேபோல, வட கிழக்கு அரபிக் கடல்பகுதிக்கும் செல்லவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Tags : Tamil Nadu ,Andaman , Wind circulation, Tamil Nadu, rain
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...