×

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க பேரவை குளிர்கால கூட்டத்தை வேறு இடத்தில் நடத்த திட்டம்? தலைமை செயலக அதிகாரிகள் ஆலோசனை

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை 6 மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும் என்பதால், வருகிற செப்டம்பர் இறுதிவாரம் குளிர்கால கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக வேறு இடத்தில் கூட்டத்தை நடத்துவது குறித்து சட்டப்பேரவை செயலக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.  இந்த ஆண்டு மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த மார்ச் 9ம்தேதி தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கியதாலும், சட்டப்பேரவை கூட்டத்தை எதிர்க்கட்சியினர் புறக்கணிப்பு செய்ததை தொடர்ந்தும்  அவசர அவசரமாக சட்டப்பேரவை கூட்டம் மார்ச் 24ம் தேதியுடன் முடிக்கப்பட்டது.

எனவே 6 மாதத்திற்குள் சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பதால், குளிர்கால கூட்டத்தொடர் வருகிற செப்டம்பர் 24ம் தேதிக்குள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். இதன் அடிப்படையில் செப்டம்பர் 23ம் தேதிக்குள் சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும், கொரோனா வைரஸ் பரவல் அதற்குள் முடிவுக்கு வரவில்லை என்றால் சட்டப்பேரவை கூட்டம் கூடுவது தள்ளிவைக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதேநேரம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்ந்து நீடித்து வருகிறது. அப்படியே சட்டப்பேரவை கூட்டம் நடத்தினாலும், தற்போதுள்ள தலைமை செயலக வளாகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் நடத்த முடியாது.

சமூக இடைவெளியுடன் கூட்டத்தை நடத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.  அதனால், அதற்கு மாற்று ஏற்பாடாக வேறு இடங்களில் சட்டப்பேரவை கூட்டத்தொடரரை நடத்தலாமா என்பது குறித்து சட்டப்பேரவை செயலக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அதன்படி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கம் அல்லது சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நூற்றாண்டு விழா மண்டபத்தில் சட்டப்பேரவை கூடுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது.

Tags : spread ,winter meeting ,elsewhere ,Chief Secretariat Officers , Corona virus, winter meeting of the council, chief secretaries
× RELATED எய்ட்ஸ் நோயை பரப்ப சிறுவனிடம் அத்துமீறல் வாலிபருக்கு 3 ஆயுள் தண்டனை