துறைமுகம் குடோனிலிருக்கும் 740 டன் அமோனியம் நைட்ரேட்டை 3 நாட்களுக்குள் மின்னணு மூலம் ஏலம் விட நடவடிக்கை: சுங்கத்துறைக்கு மாசுக்கட்டுப்பாடு வாரியம் உத்தரவு

சென்னை: சென்னை துறைமுகத்தில் உள்ள அமோனியம் நைட்ரேட்டை 3 நாட்களுக்குள் மின்னனு மூலம் ஏலம் விட சுங்கத்துறைக்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது.   கடந்த 2014ல் கரூரை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் 740 டன் அமோனியம் நைட்ரேட் கெமிக்கலை கொரியாவில் இருந்து இறக்குமதி செய்து துறைமுகத்திற்கு கொண்டு வந்தது. இந்த அபாயகரமான கெமிக்கல் 37 கன்டெய்னர்களில் துறைமுகத்தில் உள்ள குடோன்களில் உள்ளன. இந்த கெமிக்கலை உரிய ஆவணங்கள் இல்லாமல் இறக்குமதி செய்ததால் அவற்றை சுங்கத்துறை பறிமுதல் செய்து வைத்துள்ளது. ஆனால், 6 ஆண்டுகள் ஆகியும் இந்த அபாயயகரமான கெமிக்கலை அங்கிருந்து அப்புறப்படுத்தவோ, அழிக்கவோ சுங்கத்துறை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. பெய்ரூட்டில் நடந்த வெடிவிபத்தை அடுத்து சென்னையிலும் அச்சம் பரவியுள்ளது.

துறைமுகங்களில் எவ்விதமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. அவை உரிய பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதா என்று அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய   மத்திய அரசு அனைத்து துறைமுக நிர்வாகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

சென்னையில் 2வது  நாளாக சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை இயக்குனர் சுந்தரேசன், காவல் இணை ஆணையர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இரண்டாவது நாளாக நடந்த இந்த ஆய்வு முடிந்த நிலையில், மணலி கிடங்கில் உள்ள 740 டன் அம்மோனியம் நைட்ரேட்டை 3 நாட்களுக்குள் மின்னனு மூலம் ஏலம் விட நடவடிக்கை எடுக்குமாறு சுங்கத்துறை ஆணையருக்கு மாசுக்கட்டுப்பாடு வாரியம் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: