ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை 43 ஆயிரத்தை தாண்டியது சவரன்: ஒரே வாரத்தில் 1,760 அதிகரிப்பு

விரைவில் 50,000ஐ தொட வாய்ப்பு

சென்னை: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து சவரன் 43 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் மட்டும் 336 அதிகரித்தது. விரைவில் சவரன் 50,000ஐ தொடும் என்று தங்க நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் முதல் அதிகரித்து வந்தது. இந்நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஜெட் வேகத்தில் தினம், தினம் ஏறி வருகிறது. கடந்த 1ம் தேதி தங்கம் ஒரு சவரன் 41,568க்கும், 3ம் தேதி 41,592, 4ம் தேதி 41,616, 5ம் தேதி 42,592க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினமும் தங்கம் விலை அதிரடியாக அதிகரித்தது. கிராமுக்கு 50 அதிகரித்து ஒரு கிராம் 5,374க்கும், சவரனுக்கு 400 அதிகரித்து ஒரு சவரன் 42,992க்கு விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்சம்.

இந்த விலை சாதனையை நேற்றைய விலை முறியடித்தது. நேற்று கிராமுக்கு 42 அதிகரித்து ஒரு கிராம் 5,416க்கும், சவரனுக்கு 336 அதிகரித்து ஒரு சவரன் 43,328க்கும் விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற சாதனையை படைத்தது. அது மட்டுமல்லாமல் கடந்த 1ம் தேதி முதல் நேற்று வரை ஒரு வாரத்தில் சவரனுக்கு 1,760 அளவுக்கு தங்கம் விலை அதிகரித்துள்ளது. தங்கம் விலை சவரன் 43 ஆயிரத்தை தாண்டியுள்ளது நகை வாங்குவோரை கதிகலங்க வைத்துள்ளது. அதே நேரத்தில் இன்னும் தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தங்க நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து, சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது: சர்வதேச நாடுகளில் தொடர்ந்து பொருளாதார பின்னடைவு நிலவி வருகிறது. அது புதிய முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளது.

அதாவது, தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் தொடர்ந்து தங்கத்தில்தான் முதலீடு செய்து வருகிறார்கள். தங்கத்தில் முதலீடு செய்யாமல் வைப்பு நிதியிலும், பங்கு சந்தையிலும் முதலீடு செய்து வந்த முதலீட்டாளர்கள், தங்கத்தில் முதலீடு செய்தால் பெரிய வருவாய் வருகிறது என்று எண்ண தொடங்கியுள்ளனர். இதனால், அவர்களும் தங்களுடைய முதலீட்டை தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகிறார்கள். இது ஒரு காரணம். அது மட்டுமல்லாமல் பொருளாதாரம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப நீண்ட காலம் ஆகும். இதனால், வேறு எதிலும் முதலீடு செய்வதை விட தங்கத்தில் முதலீடு செய்தால் நல்ல வருவாய் ஈட்டலாம் என்று தங்கத்தின் மீதுதான் முதலீடு செய்து வருகிறார்கள். இதனால், தங்கம் விலை சர்வதேச சந்தையில் அதிகரித்து வருகிறது. இது இந்தியாவிலும் எதிரொலித்து தங்கம் விலை அதிகரிக்கிறது. இன்னும் தங்கம் விலை தொடர்ந்து உயரும். விரைவில் சவரன் 50 ஆயிரத்தை கடந்து செல்லும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: