×

2ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை: கொரோனா முன்களப் பணியாளருக்கு நல உதவி வழங்கினார்

சென்னை: கலைஞரின் 2வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில்  மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் கொரோனா முன்களப்பணியாளருக்கு நல உதவிகளை வழங்கினார். கலைஞரின் இரண்டாவது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நேற்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில், திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி, திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்,

கலாநிதி வீராசாமி எம்பி, மாவட்ட செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம், சிற்றரசு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து கலைஞர் ஆட்சி காலத்தில் செய்த சாதனைகள் குறித்த பதாகைகளை கையில் ஏந்தி முழக்கமிட்டனர்.
அதன்பிறகு மு.க.ஸ்டாலின் “கொரோனா போராளிகள்” என்று அழைக்கப்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறை ஊழியர்கள், தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். முன்னதாக அண்ணா நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கலைஞர் வாழ்ந்த கோபாலபுரம் மற்றும் சி.ஐ.டி. காலனி இல்லம், ‘முரசொலி’ அலுவலகம், திமுக தலைமை அலுவலகமான ‘அண்ணா அறிவாலயம்’ ஆகிய இடங்களில் கலைஞரின் உருவப் படங்கள் மற்றும் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம், சிற்றரசு ஆகியோர் ஏற்பாட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதேபோல், தமிழகம் முழுவதும் கலைஞர் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு நல உதவிகளை திமுகவினர் வழங்கினர். கலைஞரின் சொந்த ஊரான திருக்குவளையில் அவரின் சிலையை காணொலி வாயிலாக மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மதிமுக பொது செயலாளர் வைகோ மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர்மாலை வைத்து புகழஞ்சலி செலுத்தினார்.

அப்போது, துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, ஆட்சிமன்றக்குழுச் செயலாளரும், திருவள்ளூர் மாவட்டச் செயலாளருமான டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சு.ஜீவன், மாவட்ட பொறுப்பாளர்கள் டி.சி.ராஜேந்திரன், கே.கழககுமார், சைதை ப.சுப்பிரமணி, சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் முராத் புகாரி மற்றும் பகுதிச் செயலாளர்கள், மதிமுக முன்னணியினர் கலந்து கொண்டனர். மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்பி மலர் அஞ்சலி செலுத்தினார். அப்போது காங்கிரஸ் மாவட்ட செயலாளர்கள் க.வீரபாண்டியன், சிவ ராஜசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

‘திமுகவை அரியணை ஏற்ற சூளுரை ஏற்போம்’: மு.க.ஸ்டாலின் பேச்சு
கலைஞரின் 2ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘எங்கெங்குக் காணினும் கலைஞர்’ என்ற காணொலியை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார். அக்காணொலியில் அவர் பேசியுள்ளதாவது: எங்கெங்குக் காணினும் கலைஞர். இன்னும் இதயம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. நம் உயிரினும் மேலான அன்புத்தலைவர் நம்மோடு இல்லை என்பதை. ஒவ்வொரு நகரிலும், ஒவ்வொரு கிராமத்திலும் முத்தமிழறிஞர் கலைஞர் செய்து கொடுத்த உதவிகள், நிறைவேற்றிய திட்டங்கள், நிறைவேற்றிய சாதனைகள் நிறையவே இருக்கின்றன.

அவர் செய்த சாதனைகளின் மூலமாக இன்னும் 100 ஆண்டுகளுக்கு அவருடைய பெயர் இந்த நாட்டில் நினைவு கூறப்படும். அவர் இந்த நாட்டு மக்கள் மீது வைத்த பற்றுதான் இவை அனைத்துக்கும் காரணம். இந்த இரண்டு ஆண்டு காலத்தில் ஏராளமான வெற்றியைப் பெற்றுள்ளோம். சட்டமன்றத்திலும், நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் திமுகவின் வலிமை உயர்ந்துள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக அமர்ந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளைக் கைப்பற்றி இருக்கிறார்கள். டெல்லி நாடாளுமன்றம் முதல், குக்கிராமத்து ஊராட்சி வரைக்கும் செல்வாக்கு உயர்ந்து வருகிறது.

ஆறாவது முறையாய் திமுகவை அரியணை ஏற்ற உங்கள் நினைவுநாளில் சூளுரை ஏற்கிறோம் தலைவரே. வெல்வோம் தலைவரே. அடுத்த நினைவுநாளில் சொல்வோம் தலைவரே. ‘உத்தமத் தொண்டர்களின் ரத்தமே கழகம்’ என்றீர்கள். அந்த உத்தமத் தொண்டர்களின் சார்பில் வணங்குகிறேன் தலைவரே. ஸ்டாலின் என்றால், உழைப்பு, உழைப்பு உழைப்பு என்றீர்கள். உங்களைப் போல உழைக்க முயற்சிக்கும் இந்த எளியவன் ஸ்டாலினின் வணக்கம் தலைவரே. இவ்வாறு அவர் உரையாற்றினார்.

Tags : tribute ,artist ,memorial ,MK Stalin ,frontline staff ,Corona ,occasion , 2nd Anniversary, Artist Memorial, MK Stalin, Corona Foreman, Welfare Aid
× RELATED 2023 ஆம் ஆண்டிற்கான “கலைஞர் எழுதுகோல் விருது” விண்ணப்பங்கள் வரவேற்பு