×

கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் பழனிச்சாமி இரங்கல்

சென்னை: கேரள மாநிலத்தில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் இன்று அதிகாலை தேயிலை தோட்டப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை விரைந்து மீட்டெடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமாய் மாண்புமிகு கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களை கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 60 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இடுக்கி மாவட்டம் ராஜமாலாவில் அதிகாலை 4 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் புதைந்துள்ளன. இதில் சிக்கி சுமார் 80 பேர் மாயமாகியுள்ளனர். இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 60 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

அதில் இதுவரை 5 பேர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மண்ணில் புதைந்த மற்ற தொழிலாளர்களை தேடும் பணி தீவிரமடைந்து வருகிறது. மலப்புரம், கொச்சி, எர்ணாகுலம் உள்ளிட்ட பகுதிகளில் நீடிக்கும் கனமழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆலுவா நகரில் புகழ்பெற்ற சிவன்கோவில் தண்ணீரில் மூழ்கியுள்ளது. ராகுல்காந்தியின் சொந்த தொகுதியான வயநாட்டில் 3 நாட்களாக கனமழை நீடிப்பதால் குடியிருப்புகள், சாலைகள் அனைத்தும் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். இடுக்கி, மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களில் வரும் 11ம் தேதி வரை கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.Tags : Palanichamy ,Tamil Nadu ,landslide ,victims ,families ,Kerala ,Chief Minister , Kerala, Landslide, Chief Minister, condolences
× RELATED திரு.சுதாங்கன் அவர்கள் மறைவெய்தினார்...