×

கொரோனா தடுப்பு பணியில் உயிரிழப்போர் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 லட்சம்; அரசு வேலையும் வழங்க வேண்டும் : இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி!!

சென்னை : கொரோனா நோய் தொற்று தடுப்பு பணியில் உயிரிழப்போர் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 50 லட்சம் இழப்பீடும், அரசு வேலை வழங்குவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு விடுத்துள்ள பத்திரிகை செய்தியில்,

கொரோனா நோய் பெருந்தொற்று பரவல் தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்கள் உயிரிழப்புக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்தன. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 22-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் கொரோனா நோய் தொற்று தடுப்பு பணியில் உயிரிழக்கும் முன் களப்பணியாளர் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 50 லட்சம் இழப்பீடும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என அறிவித்தார்.

இதன் பிறகு திருச்சி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு, வீடு திரும்பும் வழியில் ஏற்பட்ட விபத்தில் பலியான கிராம நிர்வாக அலுவலர் குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் முதலமைச்சரால் ஒதுக்கீடு செய்யப்பட்டதுஇந்த நிலையில் தற்போது கொரானா நோய் தொற்று பாதிப்பால் உயிரிழக்கும் அரசுப் பணியாளர் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 25/= லட்சம் இழப்பீடு மட்டுமே வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

முதலமைச்சர் முதலில் அறிவித்த இழப்பீட்டுத் தொகையில் 50 சதவீதம் வெட்டிக் குறைக்கப்பட்டது ஏற்கத்தக்கது அல்ல .நம்ப வைத்து ஏமாற்றிய செயலாகும்.இழப்பீடு தொடர்பான அரசாணை தொடர்பாக முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு, ஏப்ரல் 22-ஆம் தேதி அறிவித்தபடி கொரோனா நோய் தொற்று தடுப்பு பணியில் உயிரிழப்போர் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 50 லட்சம் இழப்பீடும், அரசு வேலை வழங்குவதையும் உறுதி செய்து புதிய அரசாணை வெளியிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : government ,Communist Party of India , Rs. 50 lakhs; Government should also provide jobs: Communist Party of India !!
× RELATED வாக்குச்சாவடியில் தாமரை வடிவ அலங்காரம்