×

பெருநகரங்களை தொடர்ந்து தற்போது கிராமங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு

மும்பை: மருத்துவக் கட்டமைப்பில் மிகவும் பின்தங்கியுள்ள சில மாநிலங்களில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக கிராமப் புறங்களில் அதிகப்படியான கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 62,538 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 886 பேர் பலியாகி உள்ளனர். 24 மணி நேரத்தில் 49,769 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள அதிகப்படியான மாநிலங்களில், பெருநகரங்களில் மட்டுமே மருத்துவ கட்டமைப்பு போதுமான அளவில் உள்ளது. சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் மருத்துவ வசதிகள் போதுமான அளவில் இல்லை. மஹாராஷ்டிரா, குஜராத் மற்றும் மேற்குவங்கத்தில் பெருநகரங்களில் மட்டுமே கொரோனா நோய்த்தொற்று அதிகமாகப் பரவி இருக்கிறது. ஆனால், உத்திரப்பிரதேசம், பீகார், ஒடிசா மற்றும் ஆந்திராவில் கிராமப்புறங்களில் தான் கொரோனா பரவல் அதிகப்படியாக உள்ளது.

குறிப்பாக, உத்தர பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு, 27 சதவீதம் மட்டுமே நகரங்களில் பதிவாகியுள்ளது. மீதமுள்ள 73 சதவீதம் கிராமங்களில் பதிவாகியுள்ளது. இதேபோல், பீகார் மாநிலத்திலும் 27.8 சதவீதம் மட்டுமே நகரங்களில் பதிவாகியுள்ளது; அதிகப்படியான தொற்று கிராமங்களில் தான் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான படுக்கை வசதிகள் பீகாரில் இல்லை. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், மிகக் குறைவான படுக்கை வசதிகள் உள்ள மாநிலமாக பீகார் உள்ளது. அங்கு கிராமங்களில் அதிக நோய்த்தொற்று இருப்பதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ வசதிகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஒடிசா, ஆந்திராவிலும் இதே நிலை நீடிக்கிறது.



Tags : Corona ,villages ,cities , Corona, villages, cities
× RELATED லாரியை வழிமறித்து கரும்பு ருசித்த காட்டு யானை