சென்னை துறைமுகம் பெயரில் போலி வங்கி கணக்கு தொடங்கி ரூ. 45 கோடி மோசடி!: வங்கி மேலாளர் உட்பட 3 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு..!!

சென்னை: சென்னை துறைமுகம் பெயரில் போலி வங்கி கணக்கு தொடங்கி 45 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. கடந்த மார்ச் மாதம் சென்னை துறைமுகத்தில் பிக்சட் டெபாசிட் பணமான 100 கோடி ரூபாய் கோயம்பேடு இந்தியன் வங்கியில் போடப்பட்டது. பணம் போடப்பட்ட 3 நாட்களுக்கு பிறகு கணேஷ் நாடார் என்பவர் சென்னை துறைமுகத்தின் துணை இயக்குனர் என்று அறிமுகம் செய்துகொண்டு பல்வேறு ஆவணங்களை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.

அங்கு 100 கோடி ரூபாய் பணத்தை 2 நடப்பு கணக்கில் மாற்ற வேண்டும் என்று கூறி அந்த பணத்தை இரண்டு 50 கோடிகளாக மாற்றி பிரித்து வைத்திருக்கிறார். அந்த நடப்பு கணக்கில் இருந்து பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பணமானது தொடர்ந்து மாற்றப்பட்டு வந்திருக்கிறது. இதற்கு கோயம்பேடு இந்தியன் வங்கியின் மேலாளர் சேர்மதி ராஜா என்பவரும் உடந்தையாக இருந்திருக்கிறார். இவருக்கு கூடுதலாக, கணேஷ் நடராஜன், மணிமொழி என்ற நபரும் உடந்தையாக இருந்து சென்னை துறைமுகத்தின் பணத்தை பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றியது தெரியவந்திருக்கிறது.

கோயம்பேடு இந்தியன் வங்கியில் இந்த நபர்கள், செல்வகுமார் என்ற 3வது நபர் பெயரில் கணக்கு தொடங்க வந்தபோது, அங்குள்ள வங்கி அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு அவர்களை பிடித்து கோயம்பேடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால் இது சென்னை துறைமுகம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதாலும், வங்கி மோசடி விவகாரம் என்பதாலும் இது தொடர்பாக சிபிஐக்கு புகாரானது அளிக்கப்பட்டது.

போலியான நபர்கள் கணேஷ் நடராஜன், மணிமொழி மற்றும் சென்னை கோயம்பேடு இந்தியன் வங்கியின் மேலாளர் சேர்மதி ராஜா ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கியிருக்கிறது. 100 கோடி ரூபாய் பணத்தில் இந்த 45 கோடி ரூபாய் பணம் யார் யாருக்கெல்லாம் சென்றிருக்கிறது? எவ்வாறு சென்றிருக்கிறது? இந்த விவகாரத்தில் சென்னை துறைமுக அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்ற விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories: