நாட்டில் 20 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!: மத்திய அரசை காணவில்லை..ராகுல் காந்தி விமர்சனம்..!!

டெல்லி: நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்துள்ள நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது பழைய ட்விட்டர் பதிவு ஒன்றை மீண்டும் நினைவுபடுத்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், சீனா உடனான எல்லை பிரச்சனை, பொருளாதார வீழ்ச்சி ஆகிய விவகாரங்களில் திரு ராகுல் காந்தி மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நாட்டின் கொரோனா பாதிப்பு 20 லட்சத்தை கடந்துள்ள நிலையில், மோடி அரசை காணவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை கடந்த 17ம் தேதி தாம் வெளியிட்ட ட்விட்டர் பதிவையும் இணைத்து திரு ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். கடந்த 17ம் தேதி நாட்டின் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்துள்ளதை குறிப்பிட்டிருந்த அவர், இதே வேகத்தில் சென்றால் ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் நாட்டின் கொரோனா பாதிப்பு 20 லட்சத்தை தாண்டும்.

எனவே மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுத்து கொரோனா பரவலைத் தடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு முன்கூட்டியே கொரோனா பாதிப்பு 20 லட்சத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்துள்ள நிலையில், மோடி அரசை காணவில்லை என ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

Related Stories: