×

ஸ்ரீபெரும்புதூரில் கார் கண்ணாடி தொழிற்சாலையில் ஆட்குறைப்பு...!! தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம்!!!

காஞ்சிபுரம்:  ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் கார் கண்ணாடி தொழிற்சாலையிலிருந்து வேலையாட்கள் திடீரென குறைக்கப்பட்டதால், 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருகாட்டுக்கோட்டையில் உள்ள தொழிற்பூங்காவில் தனியார் கார் கண்ணாடி தொழிற்சாலை ஒன்று  செயல்பட்டு வருகிறது. இதில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 28 பணியாளர்கள் இந்த தொழிற்சாலையிலிருந்து பணி நீட்டம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் தற்போதும் 4 பேர் திடீரென பணி நீட்டம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களது குடும்பங்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பணி நீட்டம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும், சம்பள உயர்வு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தற்போது அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் சென்னை-பெங்களூரு தேசியநெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதனைத்தொடர்ந்து, தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் பட்சத்தில் கலைந்து செல்வதாக கூறியுள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து பேச்சுவார்தையானது நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Tags : Layoff ,car glass factory ,Sriperumbudur , car glass factory , Sriperumbudur ,
× RELATED குண்ணம் ஊராட்சியில் தனியார்...