கடந்த காலாண்டில் வோடஃபோன் ஐடியா தொலைத்தொடர்பு நிறுவனம் ரூ.25,000 கோடி இழப்பு

மும்பை: வோடஃபோன் ஐடியா தொலைத்தொடர்பு நிறுவனம் கடந்த காலாண்டில் ரூ.25,460 கோடி இழப்பை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.4,874 கோடி இழப்பு ஏற்பட்டதாக அந்நிறுவனம் கூறியிருந்தது.

இந்தியாவில் ஜியோவின் வருகைகக்குப் பின்னர் பிஎஸ்என்எல், ஏர்டெல், ஏர்செல், வோடஃபோன், ஐடியா உள்ளிட்ட மற்ற நெட்வொர்க்கில் உள்ள வாடிக்கையாளர்கள் ஜியோவுக்கு வந்தனர். ஜியோவும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் டேட்டா ஆஃபர், இலவச வாய்ஸ் கால் என பல்வேறு திட்டங்களை அறிவித்தது. ஜியோவுக்கு ஈடுகொடுக்க முடியாமல் மற்ற நிறுவனங்கள் பின்வாங்கின.

இந்நிலையில் வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் முதல் காலாண்டு வருவாய் அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி ஏப்ரல் - ஜூன் மாதங்கள் வரையில் இந்நிறுவனம் 10,659.30 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த காலாண்டின் வருவாயைக் காட்டிலும் 8 சதவீதம் குறைவு ஆகும். ஏற்கெனவே, இந்நிறுவனத்துக்கு கடந்த நிதியாண்டிலும் 4,874 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருந்தது. இந்த ஆண்டு அது, 25,460 கோடி ரூபாய் நஷ்டமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்புத் துறைக்கு ஒழுங்கு முறைக் கட்டணமாக 19,440.50 கோடி ரூபாய் செலுத்தியுள்ளது வோடஃபோன் ஐடியா நிறுவனம். இதனாலேயே கூடுதல் இழப்பைச் சந்தித்துள்ளது. இந்நிறுவனத்துக்கு ஒரு பயனரிடம் இருந்து ஒரு மாதத்துக்கு பெறப்படும் சராசரி வருவாய் (ARPU) 2019 காலாண்டில் 121 ரூபாயாக இருந்த நிலையில், இந்த நிதியாண்டில் 114 ரூபாயாக குறைந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் ஊரடங்கால் ரீடெய்ல் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 291.1 மில்லியனில் இருந்து 279.8 மில்லியனாக குறைந்துள்ளது. நாட்டில் மூன்றாவது பெரிய நெட்வொர்க் வோடஃபோன் ஐடியா என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: