×

பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த கேரள பேராயர் பிரான்கோ முலக்கல்லுக்கு ஜாமின்..!!

கோட்டயம்: பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த கேரள பேராயர் பிரான்கோ முலக்கல்லுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த 2018-ம் ஆண்டு பாலியல் புகார் அளித்தார். அதில், 2014 முதல் 2016-ம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில் தன்னை பலமுறை பாலியல் ரீதியாக பிரான்கோ முலக்கல் துன்புறுத்தியதாக அவர் கூறியிருந்தார். இந்த புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, பிரான்கோ முலக்கல்லை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, கோட்டயத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, தன் மீது கன்னியாஸ்திரி பொய் குற்றச்சாட்டு சுமத்தியிருப்பதாகவும், இந்த வழக்கில் இருந்து தம்மை விடுவிக்கக் கோரியும் முலக்கல் மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனுவை கோட்டயம் நீதிமன்றமும், கேரள உயர் நீதிமன்றமும் வெவ்வேறு காலக் கட்டங்களில் தள்ளுபடி செய்தன. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பிரான்கோ மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவானது, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்தே அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “பிரான்கோவின் மனுவை ஏற்றுக் கொள்ள எந்த முகாந்திரமும் இல்லை” எனக் கூறி அதனை தள்ளுபடி செய்தனர். இதனையடுத்து இந்த வழக்கு கோட்டயம் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் பேராயர் பிரான்கோ முலக்கலுக்கு ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags : Franco Mulakkallu ,Kerala , Abused case, Archbishop of Kerala, Franco Mulakkal, bail
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு