யுபிஎஸ்சி தலைவராக பேராசிரியர் பிரதீப் குமார் ஜோஷி நியமனம்

டெல்லி: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் யுபிஎஸ்சி தலைவராகப் பொருளாதார பேராசிரியர் பிரதீப் குமார் ஜோஷியை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. யுபிஎஸ்சி ஆணையத்தில் பிரதீப் குமார் ஜோஷி உறுப்பினராக இருந்து வருகிறார். தற்போது தலைவராக இருந்து வரும் அரவிந்த் சக்சேனாவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதையடுத்து பிரதீப் குமார் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத் தேர்வாணைய தலைவராக இருந்து பிரதீப் குமார் ஜோஷி அனுபவம் பெற்றவர். கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் யுபிஎஸ்சி தேர்வாணையத்தில் உறுப்பினராக ஜோஷி இணைந்தார். பிரதீப் குமார் ஜோஷியின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே 12-ம் தேதி முடிவடையும் சூழலில் அடுத்த 10 மாதங்களுக்குத் தலைவராக அவர் நீடிப்பார்.

தற்போது யுபிஎஸ்சி உறுப்பினர்களாக பிம் செயின் பாஸி, ஏர் மாரஷல் ஓய்வு ஐஏஎஸ் போன்சலே, சுஜாதா மேத்தா, மனோஜ் சோனி, சமிதா நாகராஜ், எம்.சத்யாவதி, பாரத் பூஷன் வியாஸ், டிசிஏ ஆனந்த், ராஜீவ் நயன் சவுபே உள்ளிட்டோர் உள்ளனர். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட முக்கிய அரசுப் பணிகளுக்குத் தேர்வு நடத்தி தேர்வு செய்வது யுபிஎஸ்சி பணியாகும். இந்தத் தேர்வில் முதல்நிலை, பிரதான தேர்வு, நேர்காணல் ஆகிய 3 தேர்வுகள் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: