சென்னை மணலி கிடங்கில் உள்ள 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டை 3 நாளில் அகற்ற சுங்கத்துறை ஆணையருக்கு உத்தரவு!!

சென்னை:  சென்னை மணலி கிடங்கில் உள்ள  740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டை 3 நாளில் அகற்ற சுங்கத்துறை ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மணலி வேதிக்கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு அதிகாரிகள் 2வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர். லெபனானில் உள்ள துறைமுகத்தில் 2450 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் 6 ஆண்டுகளாக வைத்திருந்த காரணமத்தினால் இரு தினங்களுக்கு முன்பு திடீரென வெடித்து சிதறியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவமானது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தற்போது சென்னை துறைமுகத்தில் கடந்த 2015ம் ஆண்டு கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 740 மெட்ரிக் டன் அமோனியம்  நைட்ரேட்டானது பறிமுதல் செய்யப்பட்டு துறைமுகத்திற்கு அருகில் வைக்கப்பட்டிருப்பதாக பரபரப்பான செய்தி ஒன்று வெளியானது. இதுதொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது 6 வருடமாக இந்த அமோனியம் நைட்ரேட்டானது பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து லெபனானில் நடைபெற்ற சம்பவத்தை போன்றே சென்னைலும் வெடி விபத்து நடந்து விடுமோ என்ற அச்சம் மக்களிடையே அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நேற்றிலிருந்து துறைமுக அதிகாரிகளும், சுங்கத்துறை அதிகாரிகளும் வெடிமருந்து வைக்கப்பட்டுள்ள மணலி பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையை அடுத்த மணலியில் சுங்கத்துறைக்கு சொந்தமான கிடங்கு பகுதியில் சாஃடா எனப்படும் சி.எப்.எஸ் கிடங்களில் தற்போது இந்த 740 டன் அமோனியம் நைட்ரேட்டானது 37 கன்டெய்னர்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. கரூர் அம்மன் கெமிக்கல் சென்டர் நிறுவனம் கடந்த 2015ம் ஆண்டு 740 அமோனியம் நைட்ரேட்டை சென்னைக்கு இறக்குமதி செய்துள்ளனர். ஆனால் அவர்கள் உரிய அனுமதி பெறவில்லை என்ற குற்றசாட்டு எழுந்தது. இதையடுத்து அதுதொடர்பாக வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதனையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நீதிமன்றம் இதுதொடர்பாக இறுதி உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதாவது 740 டன் அமோனியம் நைட்ரேட்டை பெறுவதற்கான அனுமதி அந்த நிறுவனத்திற்கு இல்லை என்றும், அதனை ஏலம் விடுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது ஏற்பட்ட கொரோனா ஊரடங்கு காரணாமாக அந்த பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பின்னர் லெபனானில் நடைபெற்ற வெடிவிபத்து தொடர்பாக இந்தியா முழுவதும் ஒரு சுற்றறிக்கையானது அனுப்பப்பட்டது. அதில் துறைமுகங்களில் எவ்விதமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளன, மேலும் அவைகள் உரிய பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதா? என அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தற்போது சென்னையில் 2வது  நாளாக சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை இயக்குனர் சுந்தரேசன், காவல் இணை ஆணையர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அமோனியம் நைட்ரேட்டானது பாதுகாப்பான முறையில் உள்ளதாக இணை தலைமை சுற்றுசூழல் பொறியாளர் தலைமையிலானது குழு தெரிவித்துள்ளது. மேலும் அமோனியம் நைட்ரேட் இருப்பு வைக்கப்பட்டுள்ள கிடங்கில் இருந்து 700 கி.மீ தொலைவில் மணலி புதுநகர் உள்ளதாக கூறியுள்ளனர்.

இதனையடுத்து மணலி புதுநகரில் 7 ஆயிரம் பேரும், 1.5 கி.மீ தொலைவில் உள்ள சடையன்குப்பத்தில் 5 ஆயிரம் பேரும் வசித்து வருகின்றனர். இதனால் மிக தொலைவில் பொதுமக்கள் வசிப்பதால், திடவடிவிலான அமோனியம் நைட்ரேட் 25 கிலோ பைகளாக அடைக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில்  தற்போது மணலி கிடங்கில் உள்ள 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டை 3 நாளில் அகற்ற சுங்கத்துறை ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: