EIA 2020 அறிக்கையை உள்ளாட்சி அமைப்புகளின் இணையதளங்களில் வெளியிடமுடியுமா?: விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!!!

சென்னை: சுற்றுசூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு தடை கோரிய மனுவுக்கு, நாளைக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும்  வளர்ச்சித் திட்டங்களை தொடங்க, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986-ன் கீழ், அனுமதி பெற வேண்டும். சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படாத திட்டமாக இருப்பின் அரசு அனுமதி வழங்கவோ, இல்லாதபட்சத்தில் அனுமதி மறுக்கவோ செய்யும்.  இதற்கிடையே, சில மாற்றம் கொண்டுவரப்பட்டு சுற்றுசூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டு அது தொடர்பான கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில்,மீனவ தந்தை கே.ஆர் செல்வராஜ் குமார் மீனவர் நல சங்கம் அமைப்பின் தலைவர் தியாகராஜன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,சுற்றுசூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கையை கடந்த  மார்ச் மாதம் 23 ம் தேதி வெளியிட்ட மத்திய அரசு, அது தொடர்பான கருத்துகள் மற்றும் ஆட்சேபனையை தெரிவிக்க 60 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளது. பிராந்திய மொழிகளில் அதன் மொழிபெயர்ப்பை வெளியிடாமல், வரைவு குறித்த  கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்க கோருவது ஏற்புடையது அல்ல என்பதால், வரைவு அறிக்கை மீதான மேல் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும், அனைத்து மாநில மொழிகளிலும் வரைவு அறிக்கையை வெளியிட  உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.

இந்த மனு நேற்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணையில் இருப்பதை சுட்டிக்காட்டி வரைவு அறிக்கை  நடவடிக்கைக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து, மத்திய அரசை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில், வழக்கு தொடர்பாக பதிலளிக்க அவகாசம் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் கோரிக்கை விடுத்தது. மத்திய அரசின் கோரிக்கையை ஏற்ற உயர்நீதிமன்றம், சுற்றுசூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு  அறிக்கையை உள்ளாட்சி அமைப்புகளின் இணையதளங்களில் வெளியிடமுடியுமா? சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் தாக்கல் செய்ய சாத்தியக்கூறு உள்ளதா? என்பது குறித்து விளக்கம் தரவும் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 13-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Related Stories: